செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

“புலியோக நமஹ” வாகக் கிடந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

நன்றி மீண்டும் வருக !
ஏறத்தாழ ஒரு வடம் கழிந்தோடிவிட்டது, இன்றளவும் இங்கு வருகை தரும் வாசகர்களில் நம் கருத்துக்களை ஆழக் கவனித்தோர் நன்குணர்ந்திருக்கக்கூடிய ஒன்று தான், இங்கு நாம் வலியுறுத்தியிருந்த கருத்துக்கள் மற்றும் “காற்றுப் போன” இயந்திரத்தின் பெயரில் வயிறு வளர்க்கப்போகும் எதிர்காலத்தின் எதிர்வு கூறல்கள்.
ஒரு சிறு அமைதியின் பின்னர் சிந்திக்கும் போது, அன்று விட்ட அளவில் இருந்து எடுத்துச் செல்வதற்கு இருப்பதென்னவோ சிறு அளவு தான்.
இணைய உலகில் கொட்டிக்கிடந்த தீர்க்க தரிசனங்களையெல்லாம் தட்டியும், திட்டியும் தீர்த்து விட்டு “புலியோக நமஹ” வாகக் கிடந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று மெல்லக் கசியும் உண்மைகளை காலங் கடந்தாவது உணர்ந்து கொள்வதால் ஆடிப்போயிருக்கும் கூட்டம் ஒரு புறம் எக் கேடாவது கெட்டுப் போகக் கடவதாக என்று விட்டெறிந்தாலும், இன்னொரு புறம் மக்கள் அவலம் எங்கே போய் தொலைந்து நிற்கிறது எனும் கேள்வி தொக்கு நிற்கிறது.
அதற்கு விடை காண இன்னொரு பிரபாகரனை உருவாக்கி விட்டுத்தான் தீருவோம் என்று சருகுப் புலிகள் கர்ஜித்தாலும், எழ முன்னரே அவர்களே அவர்களை போட்டுத் தள்ளி விடுவார்கள், எனவே இலங்கை அரசுக்கு செலவும் இருக்காது.
இருக்கிற உருத்திரக்குமாருக்கும் உருட்டுக்கட்டையால் விழும் வரை அவர் கொஞ்சக் காலம் எதையாவது செய்து விட்டுப் போகட்டும்.
வழிப்பறிக் கொள்ளையர்களின் பணப் பங்கீட்டுப் பிரச்சினையில் அடிதடி முதல் நரபலி வரை நடந்தே தீரும் என நாம் வெற்றுப் புலிகள் உயிர் வாழ்ந்த காலத்திலேயே அடித்துக் கூறினோம், அதை அன்று நம்பாதவர்கள் இன்றாவது நம்பிக் கொள்வார்கள், அது நடந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம் எனவே அது நடக்கிறது.
இத்தனைக்கும் அப்பால், முள் வேலிகள் தளர்ந்தாலும் முன்னால் ஒரு நம்பிக்கையான காலம் இல்லாமல் தள்ளாடும் இரு பக்கமும் அடிவாங்கிய மத்தளங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை எண்ணிப் பார்க்கும் போது நெஞ்சம் குமுறும், குமுற வேண்டும் இல்லையெனில் அவன் இன்னும் செத்துப் போன சருகுப் புலிகளின் கடை நிலை பக்தன் அதுவும் ஆலய எல்லை கடக்காத மேல் மாடியில்லாத பக்தனாக மட்டும் தான் இருக்க முடியும்.
180 கோடி முதலீட்டில் கலாநிதி மாறன் எந்திரனையே எடுத்து முடித்து விட்டார், நான் கொடுத்த 180 காசுகளுக்கு இவர்கள் ஒரு க்ளைமாக்சை காட்டாமல் போனார்களே என்கிற ஏக்கத்தில் இருப்பவனால் மட்டுமே அந்த எல்லைக்குள்ளும் இருக்க முடியும். அவனை ஆட்டுவிக்கும் “சாமிகள்” அகலக் கால் விரித்தார்களோ இல்லையோ நன்றாக வயிற்றை வளர்த்து விட்டார்கள் அதில் அவனுக்குத் தினமும் பிரசாதமாவது கிடைக்கட்டும்.
பிரபாகரனா? அது யார் என்று கேட்கும் அளவுக்கு கூத்தமைப்பும் சிறப்பான அரசியல் செய்கிறது, எனவே அவர்களுக்கு மக்களைப் பார்க்க நேரமிருக்காது. எப்படியாவது கிளை தாவி அடுத்த தேர்தலில் பிச்சைப் பாத்திரத்தை மஹிந்த ராசா தயவில் நிரப்பிக்கொள்வோர் பட்டியல் மனோ கணேசன் அண்டை வீ்ட்டுக்குள் குடி கொண்ட அளவில் அவர் வீடும் சரணாகதி ஆவது ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது.
மக்கள் சேவை இயக்கங்கள்!? மற்றும் அவர் தம் தேர்தல் தொண்டர்கள் எல்லாம் இன்னும் ஆட் கடத்தலிலும், முன்னர் புலி எதைச் செய்ததோ அதையே செய்து, வெளிநாட்டில் இருக்கும் உறவுக்காரர் பட்டியலைக் காட்டி பணம் பறிப்பதிலும் பசியும் பிசியுமாக இருப்பதால் அவர்களுக்கும் அடுத்த தேர்தல் வரை மக்கள் ஞாபகம் வரப்போவதில்லை, அவர்கள் தலைவர்களுக்கோ தொண்டர்கள் ஞாபகமூட்டப்படும் வரை அது மண்டைக்கு எட்டப்போவதும் இல்லை.
அறிக்கைகள், கூட்டணிகள், கூத்துக்கள் எல்லாம் மீண்டும் ஒரு தடவை காண்பதற்கு அடுத்த தேர்தல் வரட்டும், அதற்கிடையில் அங்கிருக்கும் அவலங்களை தமிழில் எடுத்துரைக்க இவர்கள் உறங்கிக் கிடக்கும் இடைவெளியில் மஹிந்த ராசாக்கள் மன்னார் குடியேற்றங்களின் புள்ளி விபரங்களையும் வெளியிட்டு விட்டார்கள்.
நாம் அன்றே எதிர்வு கூறியபடி, தென்னிலங்கை சீன அபிவிருத்திக்குள் அடங்கிக்கொள்ள வட இலங்கைக்கான பொருளாதார பேரம் இந்தியாவால் தான் ஆமை வேகத்தில் நகர்கிறது எனும் அரசியல் புகைச்சல் ராஜகிரியாவில் அலை மோதுகிறது.
சினிமா நடிகைகளின் பின்புறம் இருந்து குரல் கொடுக்க மட்டும் தகுதியைப் பெற்று நிற்கும் உலகத் தமிழர் சம்மேளனங்கள் மற்றும் தம்மைத் தாமே முடி சூட்டிக்கொண்ட இன்ன பிற தமிழ்ப் பெரியோர்களால் இனியும் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பதை மக்கள் நன்குணர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளை அவர்களுக்கு இருக்கப் போகும் தெரிவுகளோ மிக இலகுவாக முன்வைக்கப் படப்போகிறது.
கே.பி அங்கிள் ஒரு பக்கம் கருணா அம்மான் ஒரு பக்கம் என்று தெரிந்த முகங்கள் முன் காட்டப்பட்டாலும், பின்னால் வெல்வது என்னவோ மஹிந்த ராசாக்களுக்குத் தெரிந்த அரசியல் சாணக்கியம், அதை வெல்லும் அறிவும், போராடும் தெரிவும் கடந்த காலத்து சமுதாயத்திடமிருந்து பறிக்கப்பட்டது என்னவோ கசப்பான உண்மையாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினரிடம் விதைக்கப்படுவதும் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது எனும் கசந்து கொண்டிருக்கும் உண்மையும் இருக்கிறது.
புலிச்சண்டை முடிந்து இவர்கள் மூச்செடுக்கும் போது, அந் நாள் போர்க்களங்கள், இந்நாள் அழகிய நகரங்களாக மாறி ” நன்றி மீண்டும் வருக ” என்று எல்லைப் பதாகைகள் வேண்டுமானால் தமிழில் எஞ்சியிருக்கும்.
அவர்கள் கிடக்கிறார்கள், இப்போது நம் கேள்வி என்னவென்றால் ” அவர்கள் ” இல்லாத ” இவர்கள் ” என்ன செய்கிறார்கள் என்பது தான், அறிந்தவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.
http://arivudan.wordpress.com/2010/08/23/நன்றி-மீண்டும்-வருக/#more-383

கருத்துகள் இல்லை: