வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஹக்கீம் மனோவுடன் ரணில் இன்று பேச்சு

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுவான எதிரணியினை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெளிவுபடுத்துகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரை இன்று மாலை 3.00 மணிக்கு கேம்பிரிஜ் ரெஸலிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன்போது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள் மற்றும் சரத் பொன்சேகா எம்.பி.யின் விடுதலை தொடர்பாக எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.
ஐ.தே. முன்னணியில் அங்கம் வகிக்காத ஏனைய அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். இப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை எமது தலைவர் மேற்கொள்வார் என்றார்.
மனேகணேசன் கருத்து
இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
ஐ.தே. கட்சியுடன் மட்டுமே தனித்து இணைந்து பயணத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்றதாகும். எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அமைக்கப்பட்ட பொதுவான எதிர்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென்பதையே நாளைய (இன்று) பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தவுள்ளோம்.
அத்தோடு தமிழ் மக்களின் முழு எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இருவிதமான செயற்பாடுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எமது பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தெடுத்து எமது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.எனவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்துடன் ஐ.தே. கட்சி பேச்சு நடத்துவது எதிர்கட்சி கூட்டமைப்பு உருவாக்குவதற்கு பாதகமாக அமையும்.
எமது பாராளுமன்ற எம்.பி.க்கு எதிராக கட்சி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். இதேவேளை, ஐ.தே. கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதில் தமக்கு எதுவிதமான எதிர் கருத்தும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: