பத்மநாதன் கூறியது பொய்: வைகோ
பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரனால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.
2009 மே 18ஆம் தேதி, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் நாள் பிரபாகரன் இறந்து விட்டார். இனி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நானே தலைவர் என்றும், தன்னைத்தான் பிரபாகரன் தலைவர் பொறுப்பை வகிக்கச் சொன்னார் என்றும், ஒரு உலக மகா பொய்யைச் சொல்லி, தனக்குத்தானே முடிசூடிக் கொண்டவர்.
அவர் தனது பேட்டியில், தமிழ் ஈழம் என்பது அழிந்து போன லட்சியம் என்றும், விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் மீது வன்முறையை ஏவி, துன்பம் விளைவித்ததற்காகத் தான் வருந்துவதாகவும், அதற்காக இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி உள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், அந்தத் திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரண் அடைகிறோம் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளைக் கைவிட்டு, மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு அறிவிப்பை சிதம்பரமே தயாரித்து இருந்ததாகவும் பத்மநாதன் கூறி உள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ. நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ் தி.மு.க.வுக்குப் பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்கவிடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.
தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலி கள் கைவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.
பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா என்று நாங்கள் துடித்தோம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக்காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை, பிரபாகரன் மேற்கொள்வார். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக