மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக படை அதிகாரிகள் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு , கல்லடியிலுள்ள 233 ஆவது இராணுவத் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவ இணைப்பதிகாரி மொனியஸ் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி., ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா), ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகளின்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்க கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு நல்கவேண்டுமென அங்கு முடிவு செய்யப்பட்டது. ஈ.பி.டி.பி. சார்பில் சிவாமாமா, ரெலோ சார்பில் பிரசன்னா, புளொட் சார்பில் சூட்டி, ஈரோஸ் சார்பில் உதயணன், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா) சார்பில் மோகன் மற்றும் ஸ்ரீ, ரி.எம்.வி.பி. சார்பில் கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இவ்வாறான அசாதாரண சூழல் நீடித்தால் சோதனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதனால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனப் படைத்தலைமையக அதிகாரி குறிப்பிட்டதுடன், இவ்வாறான நாசகார வேலையைச் செய்வோரை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த அபகரிப்பு முயற்சி கொள்ளையர்களின் நடவடிக்கையாகுமென்றும் இவ்வாறானவர்களைத் தண்டிப்பது அவசியமென்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக