சனி, 28 ஆகஸ்ட், 2010

வியாபாரிகள் சிங்கள மக்களுக்கு விற்கும் அளவிற்குத் சிங்களத்தைக் கற்றுவிட்டார்கள்'

சிறிலங்காவின் வடக்கும் தெற்கும் ஆரத் தழுவுகின்றனவா?
முன்பொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் மையமாக விளங்கிய கிளிநொச்சியினை வார இறுதி நாட்களில் அவதானிக்கும் போது கண்டி நகரம் போலவோ அல்லது கதிர்காமத்தினைப் போல காட்சியளிக்கிறது. அதில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது, போர் தந்த எச்சங்கள் இன்னமும் இருக்கும் வன்னிப் பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் படையெடுக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் நிறைந்திருந்தார்கள்.

தொடராக இடம்பெற்ற போரின் காரணமாக 2006ம் ஆண்டின் இறுதிப் பகுதி தொடக்கம் இந்த ஆண்டினது முதல்பகுதி வரை வன்னி நாட்டினது இதர பாகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டே இருந்தது.
இந்தக் காலப்பகுதியில்தான் 300,000க்கும் அதிகமான மக்கள் நாட்டினது ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
மூர்க்கமாகத் தொடர்ந்த போரின் மத்தியில் சிக்குண்டு பின்னர் முகாம்களில் தங்கியிருந்த இவர்களில் பலர் தற்போது மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் நிறையவே மாற்றங்கள். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியில் வசித்துவந்தவர்கள் அனைவரும் போரின் மத்தியில் சிக்குண்டனர். அதிலிருந்து வெளியேறுவதற்கான எந்த மார்க்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

எது எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழமைவில் இலங்கைத் தீவினது குடிமக்கள் அனைவரும் தாம் விரும்பும் நாட்டினது எந்தப் பாகத்திற்கும் தற்போது சென்றுவரமுடிகிறது என்கிறார் ராஜா.
"தென்பகுதியினைச் சேர்ந்த மக்கள் தற்போது அதிகளவில் வடக்கிற்கு சுற்றப்பயணம் செய்துவருகிறார்கள். அதேபோலவே நாட்டின் எந்தப் பாகத்திற்கும் எங்களாலும் தற்போது சென்றுவரமுடியும்.

இதன் ஊடாக இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களது கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையினையும் ஏனைய சமூகங்களும் அறியமுடிகிறது" என ராஜா தொடர்ந்து தெரிவித்தார்.
போர் முடிவுக்கு வந்தமையானது, முழுத் தேசத்திற்குமே குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பிப்பதற்கு வழிசெய்திருக்கிறது.
இந்த மாற்றம் போரினால் நேரடிப் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் வாழுவதற்கு புதியதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது எனலாம்.
குண்டுச் சத்தங்களும் வெடியோசைகளும் நின்றுவிட்டன. ஒப்பீட்டு ரீதியில் கவலைகள் அற்ற அமைதியான மனத்துடன் இவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்குத் துவிச்சக்கரவண்டியினை மிதித்துச் செல்கிறார்கள்.
வன்னிப் பகுதியில் ஏ9 வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விளம்பரப் பலகைகளில் நம்நாட்டின் அழகு ராணிகளும் பாடகர்களும் சிரித்தவண்ணமிருக்கிறார்கள்.
உள்ளூர் உல்லாசப் பயணிகள் போரின் எச்சங்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் தங்களது வாழ்வினை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்.வன்னிப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலை என அறியப்பட்ட யாழ்-கண்டி நெடுச்சாலையின் இரு மருங்கிலும் தற்போதுதான் புதிய கட்டங்கள் முளைவிட ஆரம்பித்திருக்கிறன.
போரின் கோரப் பிடியில் சிக்கி நின்ற இந்தப் பிராந்தியம் மெல்ல வழமைக்குத் திருப்புகிறது என்பதையே இது காட்டுகிறது.
வன்னிப் பிராந்தியத்தில் இதுவரைக்கும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கிடைக்கக்கூடியதை வைத்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துகிறார்கள்.
அனைத்துக் குடும்பங்களும் இடம்பெயர்ந்த குடும்பங்கள்தான். சொத்துக்களாகத் தங்களிடம் இருந்தமை அனைத்தையும் இன்று இவர்கள் இழந்து நிற்கிறார்கள்.
ஆதலினால், ஆரம்பத்திலிருந்து மீண்டும் வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை.
அரசாங்கம் ஆரம்ப உதவியாக வழங்கியிருக்கும் பணத்தினைக் கொண்டே மீள்குடியேற்றப்பட்டிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது வாழ்வினை மீளவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் இந்த மக்கள் தமது வாழ்வினை ஆரம்பிக்கும் வகையில் 25,000 ரூபாய் பணத்தினை அரசாங்கம் மீள்குடியேற்ற உதவியாக வழங்கியிருக்கிறது.
வன்னியின் பல பாகங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. எது எவ்வாறிருப்பினும் தங்களது ஊர்களுக்கு மீண்டும் திரும்பியிருக்கும் மக்களின் மனங்களில் ஏதோவொரு நிச்சயமற்றநிலை இருப்பதாகவே தெரிகிறது.
போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் அதுதந்த கொடுமையான அனுபவங்கள் மற்றும் இழப்புக்கள் என்பன இவர்களது மனங்களைத் தொடர்ந்தும் புண்படுத்திக்கொண்டே இரக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த மக்கள் எதனை எதிர்கொண்டார்களோ அதன் சின்னமாக குண்டுச் சிதறல்களால் சல்லடையிடப்பட்ட வீடுகள் இன்னமும் இருக்கின்றன.
"போரின் பின்னானதொரு நிச்சயமற்ற தன்மையுடனோ அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினை இதுவல்ல. போரின் விளைவாக நாங்கள் இழந்தது ஏராளம்.
எங்களது ஊர்களுக்கு நாம் திரும்பியிருக்கின்றபோதும் சூழல் பெரிதும் மாறிவிட்டது. வீடுகள் சிதைந்துபோய்க் கிடக்கின்றன. எங்களது அன்புக்குரியவர்கள் பலர் இன்று எங்களுடன் இல்லை என்றாகிவிட்டது. ஆதலினால் நாம் வாழும் சூழலில் எவ்வளவோ மாற்றங்கள்" என்கிறார் சாந்தினி டானியல் என்ற இரண்டு பிள்ளைகளின் தாய்.
வீடு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் என்பன மீள்குடியேற்றப்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
"தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி மீள்குடியேற்றப்பட்டிருக்கும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பாடசாலைக்கு வருகிறார்கள்.
இருந்தாலும் பொருத்தமான போக்குவரத்து வசதிகள் இன்மையினால் பாடசாலைக்குப் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வந்து சேர்கிறார்கள். இருப்பினும் தற்போது அதிகளவிலான பேருந்துகள் சேவையில் உள்ளன" என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டிருப்பது என்பன நீண்ட பல ஆண்டுகளாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவரமுடியாத நிலையிலிருந்த இந்த மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.மீள்குடியேற்றப்பட்ட இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் துவிச்சக்கரவண்டிகளையே போக்குவரத்திற்காக இன்னமும் பயன்படுத்துகின்றபோதும் போக்குவரத்து என்பது இவர்களுக்கு இப்போது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் தற்போது தனது கவனத்தினைச் செலுத்தியுள்ளது.
மக்கள் தங்களது வாழ்க்கையினைத் தங்குதடையற்ற வகையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுவதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கூறுகிறார்.
"மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்பதற்குத் துணைபுரியும் வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. உதாரணமாக, மக்களின் நன்மைகருதி வீடமைப்புக் கடன் திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
போக்குவரத்துத் துறையினை எடுத்துக்கொண்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 24 பேருந்துகள் சேவையில் உள்ளன. தவிர பாடசாலை செல்லும் மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன" என்றார் அவர்.
கிளிநொச்சி நகரத்தினையும் தாண்டி வடக்காக பல கி.மீ தூரம் வரை நாம் பயணிக்கும் பொது போரின் தளும்புகள் குறைந்திருக்கும் ஒரு பகுதியினை நாம் காணலாம்.
இறுதிப் போரினால் யாழ்ப்பாண குடாநாடு பாதிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். ஆதலினால் கிளிநொச்சி நகரத்துடன் ஒப்பிடும் போது குடாநாட்டில் அழிவின் சின்னங்களை அதிகம் காணமுடியவில்லை.
மரத்தின் கீழே பல உந்துருளிகள் நிறுத்த வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஏறியமர்ந்தவாறிருக்கும் இளையவர்கள் தங்களது அன்றைய பொழுதைப் பற்றி அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

"எங்களில் மொத்தம் 15 பேர். கிரிக்கெட் விளையாடுவதற்காக ஏனையவர்கள் வரும் வரைக்கும் காத்திருக்கிறோம்" என யாழ்பாணத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளியான 20 வயதுடைய அருள்தாசன் சாள்ஸ் எங்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குமுன்னர் இருந்த நிலைமை இன்றில்லை. அப்போதிருந்த நிலைமையில் இதுபோன்ற இளைஞர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் சந்திப்பதற்கோ அல்லது கிறிக்கெற் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதில் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டன.

சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரினால் யாழ்ப்பாணக் குடாநாடு நேரடியாகப் பாதிக்கப்படாதபோதும் இறுதிப் போர் தந்த தாக்கங்களைக் குடாநாட்டு மக்களும் உணர்கிறார்கள்.

"அந்தக் காலம் வித்தியாசமானது. அடிக்கடி ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால் குடாநாட்டுக்குள்ளேயே பயணம் செய்வது சிக்கல் நிறைந்ததொன்று" என சாள்ஸ் கூறுகிறார்.

ஓகஸ்ட் 11 2006ல் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது யாழ்ப்பாணக் குடாநாடுதான். வட போரரங்கில் மோதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து முகமாலைச் சோதனைச் சாவடி மூடப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டமையானது குடாநாடு நாட்டின் பிற பாகங்களிலிருந்து துண்டிக்கப்படுவதற்கு வழிசெய்தது. இதன் பின்னர் கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாகவே குடாநாட்டுக்கான பயணங்கள் இடம்பெற்று வந்தன.

"பொருட்கள் எங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரைக்கும் அவை கிடைக்குமா இல்லையா எனத் தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலைமையிலேயே நாங்கள் அப்போது இருந்தோம்" என மொத்த விற்பனை முகவரான ஜே.சத்தியமூர்த்தி கூறுகிறார்.

"ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட நிகழ்வு குடநாட்டு மக்களின் வாழ்க் கையில் முக்கியமானதொரு கட்டமாக மாறியது.

உள்ளூர் உற்பத்திகளிலும் கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பொருட்களிலும் தங்கியிருக்கவேண்டிய நிலைக்கு குடாநாட்டு வாசிகள் தள்ளப்பட்டனர்.

கடல்வழியாகப் பொருட்களைத் தருவிக்கும் போது அதன் செலவு அதிகம். அத்துடன் வேண்டியபோது பொருட்கள் வந்து சேர்வதில்லை."

ஆனால் இன்று குடாநாட்டில் வியாபாரம் முழுவேகம் கண்டிருக்கிறது.

"நெடுஞ்சாலை தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தேவையான பொருட்கள் குடாநாட்டுக்குத் தங்குதடையின்றி வந்து சேர்கிறது.

ஆதலினால் குறித்ததொரு பொருள் கொழும்பில் விற்கப்படும் விலை எதுவோ அதே விலைக்கே குடாநாட்டிலும் மக்கள் அதனைப் பெறமுடிகிறது" எனத் தொடர்ந்தார் சூரியமூர்த்தி.

அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் உள்ளூர் உல்லாசப் பயனிகளின் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நூலகம், கசூரினா கடற்கரை ஆகியன குடாநாட்டில் உள்ளூர் உல்லாசப் பயணிகள் படையெடுக்கும் இடங்களில் முதன்மையானவை.கட்டுக்கடங்காத வகையில் தென்பகுதி மக்கள் குடாநாட்டுக்குப் படையெடுப்பதையடுத்து யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளெங்கும் தற்போது தங்ககங்கள் முளைவிட்டிருக்கின்றன.

"யாழ்ப்பாணத்தினைப் பற்றியும் அதன் மக்கள் பற்றியும் தென்பகுதி மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். போர் முடிவுக்கு வந்தமையானது பெருந்தொகையான தென்பகுதி மக்கள் குடாநாட்டுக்கு வருவதற்கு வழிசெய்திருக்கிறது.எங்களுக்குச் சிங்களம் தெரியாது. ஆனால் தற்போது குடாநாட்டு வியாபாரிகள் அனைவரும் தங்களது பொருட்களைச் சிங்கள மக்களுக்கு விற்கும் அளவிற்குத் தற்போது சிங்களத்தைக் கற்றுவிட்டார்கள்' என்றார் சூரியமூர்த்தி. 'The Nation' என்னும் இணைய ஊடகத்தில் Arthur Wamanan எழுதியுள்ளார். அதனை புதிப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

கருத்துகள் இல்லை: