விருதுநகர் : மகள் தற்கொலையை மறைத்த தாய் உட்பட இருவரை விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் நந்தகுமாரி(17). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆவூர் அருகேயுள்ள ராஜ நத்தங்கல் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் சிவபாலன்(25). இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றவர். காதலர்களான இருவரும் 2009 மே 31ல் வீட்டுக்கு தெரியாமல் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். நந்தகுமாரியின் தாய் செண்பகபூபதி தனது மகளை, சிவபாலன் கடத்தி சென்றதாக வேட்டைவலம் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை செய்த போலீசார் தாம்பரத்தில் சிவபாலனுடன் குடும்பம் நடத்திய நந்தகுமாரியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நந்தகுமாரியின் விருப்பபடி தாய் செண்பகபூபதியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து செண்பகபூபதி, இவரத மகன் உத்திரகுமார், நந்தகுமாரி ஆகிய மூவரும் விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாட்டில் உள்ள செண்பகபூபதி அக்கா தங்கமயில் வீட்டிற்கு வந்து தங்கினர். ஜூன் 29ல் காதல் திருமணம் குறித்த பேச்சில் மூவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நந்தகுமாரி அதே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வயிற்று போக்கு காரணமாக மகள் இறந்து விட்டதாக கூறி அங்குள்ள சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டனர். நந்தகுமாரியை போலீசார் அழைத்து சென்றதை அறிந்து தலைமறைவாக இருந்த சிவபாலன் சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவக்குமார், நாகப்பன் ஆகியோர் நந்தகுமாரியை
கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். கோர்ட்டில் ஆஜரான செண்பகபூபதி, தனது மகள் வயிற்று போக்கு காரணமாக இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்தார். அதில் இறப்புக்கான காரணம் இல்லாததால் சந்தேமடைந்த கோர்ட், வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டது. கூடுதல் எஸ்.பி. ஷாஜகான் தலைமையிலான போலீசார் விசாரணையில் நந்தகுமாரி தற்கொலை செய்து கொண்டது,போலீசாருக்கு தெரியாமல் பிணத்தை எரித்தது தெரியவந்தது.
மேலும் நந்தகுமாரியை தற்கொலைக்கு தூண்டியதாக செண்பகபூபதி, உத்திரகுமார் ஆகியோரை கைது செய்தனர். மைனரான நந்தகுமாரிக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்தது, இவர் உண்மையில் தற்கொலைக்கு தூண்டப்பட்டரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக