சனி, 28 ஆகஸ்ட், 2010

உங்களுக்கு ஏற்ற பிரதேசங்களை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள் விநாயகர்த்தி முரளிதரன்

நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் மூலம் உங்களுக்கான   எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து மழைக்காலத்திற்கு முன்னர் குடியமர்த்த வேண்டும்   என்பதே என்னுடைய நோக்கம்.
அதற்கு ஏற்ற வகையில்   உங்களுக்கு   ஏற்ற பிரதேசங்களை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள் என மீள்குடி யேற்றப் பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு,  நவரெட்ணபுரம், கடற்கரைச்சேனை, கூனித்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களை  மீளக்குடியமர்த்துவது    சம்பந்தமாக  கலந்துரையாடியபோதே பிரதி அமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அமைச்சர், எம்மிடமிருந்து பறிபோன காணிகள் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு முடிந்து விட்டது. அரசுக்கு நம்முடைய   காணிகளை எப்போதும்   எடுத்துக்கொள்வதற்கு முடியும் அதற்கு சட்டம் இடம்கொடுக்கிறது. எனவே நமக்கான வளமான காணிகளை வேறு   இடங்களில்   இனங்காண்பது தான்  இப்போதைக்கு சாத்தியமான விடயம். எனவே நமக்குரிய காணிகளை இனங்கண்டு விரைவில் அதற்கான  வேலைகளில்  நாம்  ஈடுபட வேண்டும்.    அது உங்கள் கைகளில் தான் உள்ளது.
உங்களுடைய வயல் காணிகளில் நீங்கள் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன். அவற்றில் நீங்கள் விவசாயம் செய்யலாம். ஆனால் வேறு இடங்களில் வீடுகள் அமைக்கப்படவேண்டும்.
ஏனெனில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் இடங்களில் குடியிருப்பது எமது எதிர்கால சந்ததிகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.    ஏனெனில் அந்தப்பிரதேசங்களில் கதிர்வீச்சுக்களால் பல்வேறு பாதிப்புக்கள்  ஏற்படும்  வாய்ப்பிருப்பதாக   ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு இடங்களில் இருக்கும் உங்களுடைய காணிகள் இருக்கட்டும். அத்துடன் புதிய காணிகளை இனங்கண்டு அவற்றினை உங்களுடைய பெயர்களில் பதிவு செய்து அவற்றில் ஆரம்பத்தில் உங்களுக்கான தற்காலிக இருப்பிடங்கள் அமைத்து தருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர் வீட்டுத்திட்டங்களின் கீழ் வீடுகளை அமைத்துத் தருவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முகாம்களில் இருக்கும் வரை வீடுகள் அமைப்பதற்கு முடியாது.   அதற்கு எங்கு நீங்கள் குடியேறவுள்ளீர்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கவேண்டும்.
உங்களுக்கு  ஏற்கனவே    தந்த  அரசின் காணிகள் பிடிக்கவில்லை.   அதனால் நீங்கள் வேண்டாம் என்று கூறினீர்கள். ஆகவே நீங்களே உங்களுடைய காணிகளைத் தெரிவு செய்து கூறும் போது அவற்றினைத் துப்பரவு செய்து உடனடியாக தற்காலிகமாக நீங்கள் தங்குவதற்கான இருப்பிடங்கள் அமைத்துத் தருவோம்.
உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட வேலிகள் அமைக்கப்பட்ட இடங்களில் அருகில் நீங்கள் குடியிருப்பது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
பட்டித்திடல்,  கிளிவெட்டி,   மணல் சேனை,   கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து மக்களையும்   ஒரே பிரதேசத்தில் குடியமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு காலத்தில் உங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட காணிகள் மின் நிலையங்கள் அமைக்கப்படவில்லையானால்   அந்தக்காணிகளை மீண்டும்   பெற்றுத்தர  நடவ டிக்கைகள் எடுக்கலாம் என்றார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் இணைப்பாளர் எஸ்.ரவீந்திரன், மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனிபா மற்றும் முகாம் பொறுப்பாளரும்   கிராம   சேவையாளருமான கே. செல்வரெட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த மக்கள் நையந்தைக்குளம், பெரியகுளம் ஆலங்குளம், தொடுகான்குளம், மெட்டையாணிக்குளம் போன்ற இடங்களில் எங்களுக்கான காணிகளைத் தாருங்கள்.    பல இடங்களில் குடி நீர்ப்பிரச்சினைகள் ஏற்படும். அங்கு 60 அடி ஆழத்திற்குப்பின்னர்தான் நீர் கிடைக்கும்.   அத்துடன் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவே எங்களுக்கான இடங்களை நாங்கள் தொழில்கள் செய்யக்கூடிய இடங்களில் காணிகளைத் தாருங்கள்.
நீண்டகாலமாக இந்த இடங்களில் தங்கியிருந்து எங்களது வாழ்க்கையை நடத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. எங்களை நல்லதொரு இடத்தில் குடியமர்த்தினால் போதுமானது. ஏற்கனவே குடியமர்த்தப்பட்டுள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விடவும் கூடிய தூரங்களையே நாங்கள் கேட்கின்றோம்.
சம்பூருக்கு அருகிலேயே எங்களைக் குடியமர்த்துங்கள். வேறு எங்கும் கொண்டு சென்று விடாதீர்கள். உங்களது கையில் தான் எங்களைக் குடியமர்த்துவது உள்ளது.
அத்துடன் இப்போது முகாமில் உணவுக்கு ஓரளவுக்குப் பிரச்சினை இல்லை. அதற்கான அசி, பருப்பு, சீனி, தேங்காய், எண்ணை போன்றவற்றை உலக உணவுத்திட்டம் கொடுக்கிறது. ஆனால் வேறு வேலைகளுக்கான பொருட்களை எங்களுக்குப் பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சம்பூர்  பிரதேசத்தில் நாங்கள் கேட்கும் இடங்களில் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் மூதூரில் குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களும் பாதிக்கும்.    நாங்கள்   கேட்பது   மூதூரில்   குடிய மர்த்தப்பட்டுள்ளதைவிடவும் தூரமான இடங்களாகும் எனத் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையின் சம்பூர் பிரதேசங்களில் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இடம்பெயர்ந்த 2000 வரையான குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படாது கிளிவெட்டி, பட்டித்திடல், கட்டைப்பறிச்சான்,  மணல்சேனை உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: