தமிழ் ஆவிகள் கப்பலின் அசாத்தியமான கடற் பயணம் (The ‘impossible’ voyage of a Tamil ghost ship )
மார்க் மக்கினோன் Mark MacKinnon
சொங்கஹலா, தாய்லாந்து.—( சனிக்கழமை,’குளோப் அன்ட் மெய்லி’ல் இருந்து)
கனடா நோக்கிப் புறப்படவிருக்கும் படகினைப் பற்றிய கிசு கிசுக்கள் நீண்டநாட்களுக்கு முன்பே தாய்லாந்து வாழ் சிறிய ஆனால் நெருக்கமாக பின்னிப்பிணையப்பட்ட தமிழ் சமூகத்தினரிடையே பரவியிருந்தது.
தமிழ் உணவகமான நியு மெட்ராஸ் கபே பாங்கொக் நகரின் இதயப்பகுதியில் கச கசக்கும் நெருக்கமான வணிகப்பகுதியில் அமைந்துள்ளது. உள்ளே சுற்றிலும் ஸ்ரீலங்காவின் வடபகுதி தமிழ் கடற்கரைகளின் அழகிய படங்கள் மாட்டப்பட்டு ரொட்டி,கறி,லசி என்பன பரிமாறப்படும். இதன் வழமையான வாடிக்கையாளரிடையே அடிக்கடி ஒரு கதை உலாவி வந்தது,அதாவது மோசமான தமிழ்புலிகள் அல்லது அவர்களின் முன்னாள் போராளிகளில் சிலர் ஏதோ திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று.
இந்த உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவர் பேசுகையில்’இந்தப் பேச்சு வெகுநாட்களின் முன்பே ஆரம்பமாகி விட்டது.ஆனால் இது வெறும் பேச்சு மட்டுமல்ல’ இந்த வாயாடி யிடமிருந்து இறுதியில் வெளிவந்தது வீரதீரச் செயல்கள் நிறைந்த ‘சண் சீ’ கப்பலும் அதில் பயணித்த 492 பயணிகள் பற்றியும் சிலிர்க்க வைக்கும் மர்மம் நிறைந்த கதைகள். பத்திரங்களில் பணக்காரனான ஆனால் ஏழ்மையாகத் தோற்றமளிக்கும் மலிவான குடியிருப்பில் வாழும் ஒரு மனிதரினால் கப்பல் ஒன்று வாங்கப்பட்டதும், சிறிய மீன்பிடி படகுகளில் நூற்றுக்கணக்கான ஆட்கள் நிறைக்கப் பட்டு கடற்பயணம் மேற்கொண்டு சர்வதேசக் கடற்பரப்பில் ஒன்று கூடுவதையும், நடுக்கடலில் தாய் கடற்படைக் கப்பலுடன் மோதல் ஏற்பட்டு துரத்தப்பட்ட ஆவிக்கப்பல் வியட்னாம் கடற்பரப்பை அடைந்தபடியால் தாய்க்கப்பல் மோதலைக் கைவிட்டுத் திரும்பியது என்று பல கதைகள்.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் பின்விளைவாகத் தப்பியோடும் தமிழர்களை கனடாவிற்கு கொண்டு செல்லும் திட்டம் உருவாகியது, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு. பிரிட்டிஸ் கொலம்பியா கரையை சண் சீ கப்பல் வந்தடைவதற்கு பல மாதங்கள் முன்பே அதிகாரிகள் அதனைக் கண்காணித்த போதிலும் கப்பலை இயக்குவோர் எபபோதும் திறமையில் அவர்களைவிட ஒரு அடி முன்னாலிருந்தார்கள்.ஆட்களை கரைக்கும் கடலுக்கும் திறமையாக நகர்த்துவது மட்டுமல்ல, தங்கள் நடவடிக்கைகளை இரகசியமாகவும் கண்காணிப்புகளை மறைத்து வெகு சாமர்த்தியமாகச் செயற்பட்டார்கள்.
ஆனாலும் ஒரு வழித்தடம் இருக்கிறது. சண் சீ என்று இப்போது கூறப்படும் கப்பலானது, ஏப்ரல முதலாம் திகதி சொங்கஹாலா துறைமுகத்தை தனது கடைசிப் பயணமாக வந்தடைந்தது. பெயார்லி சீவேர்த்தி என்கிற அதன் முந்தைய உரிமையாளர் அதனை கழிவுகளுக்காக விற்பதற்காகச் சம்மதித்திருந்தார்கள்.ஆனால் அதற்குமுன் கடைசியாக பாங்கொக்கிலிருந்து கால்நடை உணவுகளை தென்துறைமுக நகரொன்றுக்கு வினியோகிக்க வேண்டியிருந்தது. மலேசியாவுக்கு சமீபமான இத்துறைமுகம் வெள்ளை மணல் கடற்கரையையும், ஆழ்கடல் எண்ணை அகழ்வு மேடைகளையும் மட்டுமன்றி மனிதக்கடத்தலகளுக்கும்,பாலியல் சுற்றுலாக்களுக்கும் பிரபலமாகி பொருளாதாரத்தைப் பெருக்கி வருகிறது.
ஹரின் பனிச் -19 என அப்போது அழைக்கப்பட்ட 57 மீற்றர் நீளமான இக் கப்பல் பெரியதும் அதிக இலாபம் தரக்கூடியதுமான சரக்குகளை வினியோகிக்க அளவில் சிறிதாக இருப்பதால் தகுதியற்றதாகவும் மிகவும் பழையதான படியால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதப்பட்டது. எனவே மார்ச் மாதம் 5.35 மில்லியன் தாய் பாற்றுக்கு (கூ175,000 கனடியன்) ஒருவர் வாங்க விரும்பியதும் உரிமையாளர்கள் அதனை விடுவித்தார்கள்.
புதிய உரிமையாளர்களான சண் அன்ட் ரஸியா கோ, என்கிற நிறுவனம் பத்திரங்களின்படி ஸ்ரீலங்கா பிரஜையான கிறீஸ்துராஜா குணரொபின்சன் என்பவருக்குச் சொந்தமானதுடன் அவரால் உடனடியாகவே தருமாறு வற்புறுத்தப் பட்டு சோங்ஹாலா துறைமுகத்தில் வைத்து அவரால் கையேற்கப் பட்டது.
குணரொபின்சன் அவர்கள் கறுப்பு நிறமுடைய சிறிய மனிதர் சாதாரண ஆடைகளையே அணிபவர் தாயலாந்து மொழி அறியாதவர். மார்ச் 30ம் திகதி புதிய உரிமையாளருக்கான பத்திரங்களில் அவர் கையெழுத்திட்டு சட்டபூர்வமாக அவரது நிறுவனம் புதிய உரிமையாளராக பதிவு பெற்றதும் அவர் காணமற் போய்விட்டார்.
சில நாட்களின் பின் பெயரிடப்படாத அந்தக் கப்பல் தாய் கொடியையும் பதிவையும் அகற்றி விட்டு காணாமல் போய்விட்டது. ஏப்ரல் 7ம் திகதி இந்தியரையோ அல்லது ஸ்ரீலங்காவினரையோ போலத் தோற்றம் கொண்ட பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய குழுவொன்று தாங்கள் கப்பற்துறை பணியாளர்கள் என்றும் சில திருத்த வேலைகளுக்காக கப்பலை வடக்குத்துறைமுகமான சூரத் ;தானிக்கு கொண்டு போகப்போவதாகக்கூறி கப்பலை கடலினுள் எடுத்துச் சென்று விட்டார்கள். கப்பல் சூரத் தானியை அடையவேயில்லை. அத்துடன் கொடியில்லாமல் சர்வதேச கடற்பரப்பினுள் பிரவேசிக்கும் கப்பலொன்றுக்குத் தேவையான சேருமிடத்தைப் பற்றி அறிவிக்கும் ஆவணங்கள் கூட பூர்த்தியாக்கப்படவில்லை.
மூன்று வாரங்களின் பின் தாய்லாந்து அரசகடற்படையின் தென் பிராந்திய கடடளைப் பகுதியினர் காணமற்போன கப்பலைக் கண்டுபிடிக்க தேவையான திட்டங்களை அனுப்பத்தொடங்கினார்கள். அவுஸ்திரேலிய அரசின் கவனத்துக்கும் குடியேற்றக்காரரைக் கொண்ட கப்பல் ஒன்று அவர்களின் பகுதியை நோக்கி வரலாம் என அச்சப் படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இத் திட்டங்கள் பயன்தரவில்லை. ஆனால் மே 8ம் திகதி எண்ணை அகழ்வு மேடைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகள் சோங்ஹாலா துறைமுகத்தில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் சண் சீ கப்பலை கண்டுள்ளார்கள்.
துரத்தல் நாடகம் ஆரம்பமானது. எச்.ரீ.எம்.எஸ் சாட்டாஹிப் (HTMS Sattahip) என்கிற தாய் போர்க் கப்பல் அன்று பின்னிரவின் போது இயந்திரங்களை நிறுத்திவிட்டு கடலில் ஆடிக்கொண்டிருந்த சண் சீ கப்பலைக் கண்டு சடுதியாக அதனை நெருங்கியது. சாட்டாஹிப் குடியேற்றக்காரரின் கப்பலை அது எங்கு போகிறது என்பதை அறிவதற்காக பலமுறை கூவி அழைத்துள்ளார்கள். மறுநாள் அதிகாலை சாட்டாஹிப் சண் சீ கப்பலை நோக்கி நகரத்தொடஙகியது. யுத்தக் கப்பல் அருகில் நெருஙகியதும் சுமார் 150 க்கு மேற்பட்ட தமிழர்கள் சண் சீ யின் மேல்தட்டில் கொத்தாக குழுமியிருந்ததை கண்டது. அவர்களில் சிலர் யுத்தக்கப்பலை நோக்கி மகிழ்ச்சியுடன் கை அசைத்துக் காண்பித்தார்கள். ஆனால் சாட்டாஹிப் கிட்ட நெருங்கியதும் கூச்சல் எழத் தொடங்கியது. சண் சீ யின் மேல்தட்டிலிருந்த ஒருவன் சாட்டாஹிப் கப்பலை நோக்கி ஒரு வாயு நிம்பிய டப்பாவை சுழற்றி வீசினான். மற்றவர்கள் மேலிருந்து சாட்டாஹிப்பை நோக்கி குதிக்கத் தயாரானார்கள்.’ தப்பிக்கும் முயற்சியாக’ தாய் கப்பல் பணியாட்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
‘கப்பல்களிலிருந்து இவ்வாறு குதிப்பது மிகவும் ஆபத்தானது. சாட்டாஹிப் பின் வாங்க வேண்டியதாகிவிட்டது.” தனது அடையாளத்தை அறிவிக்க விரும்பாத ஒரு தாய் கடற்படை அதிகாரி இவ்வாறு கூறினார். சாட்டாஹிப், இப்போது தனது இயந்திரத்தை இ.யக்க ஆரம்பித்த சண் சீ யை நிழலாக தொடரந்தது. தன்னை சண் சீ யின் கப்டன் என அறிமுகப் படுத்திய ஒரு மனிதன் சாட்டாஹிப் உடன் குரல் வழி தொடர்பினை ஏற்படுத்தி தான் தன் பயணத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்ததாகவும் தற்போது பாங்கொக்கினை நோக்கித் தொடர்வதாகவும் கூறினான். ஆனால் கப்பல் கிழக்கு நோக்கி போகத்தொடஙகியது. மூன்று மணித்தியாலங்களின் பின் கடற்படையினர் தமது பின்தொடரலை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர், ஏனெனில் சண் சீ வியடநாம் கடல் எல்லைக்குள்ளே பிரவேசித்து விட்டது.
வியட்னாம் கடற்பிரிவுப் பொலிஸார் சண் சீ யுடன் தொடர்பு கொண்டதாக மே 13ல் அறிவித்திருந்தார்கள். ஆனால் எதுவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
மீண்டும் மே 17ல் சண் சீ தாய் நீர்ப்பரப்பில் திரும்பவும் சோங்ஹாலா விற்கு அருகில் காணப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன .இரண்டு நாட்களின் பின் ஸ்ரீலங்காவைச் சேரந்த 40பேர்கள் இங்குள்ள விடுதியொன்றுக்கு வந்து தங்கினார்கள். ஆனால் அன்று பிற்பகலே அவர்கள் சோங்ஹாலாவில் மீன்பிடி படகுகளில் ஏறுவதைக் காணக் கூடியதாக இருந்தது.
ஐந்து நாட்களின் பின் சிங்கப்பூரில் நிலை கொண்டிருந்த கடற்படை அதிகாரிகள், கொடியில்லாத கப்பல் இன்னமும் அங்கு வந்து சேரவில்லை என அறிவித்தார்கள். கப்பல் மீண்டும் காணாமற் போயிற்று.
“அதன்பின் என்ன நடந்தது என்று யாருக்கும் எதுவும தெரியாது, அது ஒரு மாதிரியான ஆவிகள் கப்பல்” தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மற்றொரு கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
கப்பலின்முன்னைய உரிமையாளர்கள் கப்பல் மேற்கொண்டிருக்கும் பிரயாண முயற்சியை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள். திரு .பகுமின்டர் ஹரின்சூற், ஹரின் பன்ச் கப்பலின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் யப்பானில் கட்டப்பட்ட 30வருட பழமையான அந்தக் கப்பலால் முடிந்தளவுக்கு சோங்ஹாலா விற்கும் பாங்கொக்கிற்கும் இடையேயுள்ள தூரத்தையே கஷ்டப்பட்டு கடக்க முடியும், இந்த அபாயகரமான நிலையில் உள்ள கப்பலை வெகு தூரத்திலுள்ள கனடாவிற்கு கொண்டு செல்லுவதைப்பற்றி சிந்திப்பதே முட்டாள்தனமானது.
“தாய்லாந்து குடாவில் கொந்தளிப்புள்ள பல கடல்கள் உள்ளன, அதனால் அவர்களால் பயணம் செய்ய முடியாது. அவர்களிடத்தில் மிகத் திமையுள்ள ஒரு கப்டன் இருந்திருக்க வேண்டும்” ஹரின் பன்ச் உடைய கப்பற்தொகுதி முகாமையாளர் வீனஸ் போன்பிரசேட் முன்பு அந்தக் கப்பலை அடிக்கடி தலமையேற்றுச் செலுத்தியவர் தெரிவித்தார் .(சில செய்திகளின்படி தமிழ் புலிகளின் பெயர் பெற்ற ஆயதக்கடத்தல் சூரன் வினோத் என்பவரே கப்டனாகப் பொறுப்பேற்று இக் கனடாப் பயணத்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது.) இக்கப்பல் பயணத்தில் மேலும் வியக்க வைப்பது என்னவெனில் அதில் கப்பல் சரக்காக ஏற்றப்பட்டிருந்தது 492 மனிதர்களே. அந்தக் கப்பல் விற்கப் பட்ட பொழுது அதில் கப்பற் குழுவினருக்கான 15 படுக்கை இடங்கள,; ஒரு சிறிய கழிப்பறை, தாழ்வான ஒரு சமையலறை, சுமார் 30 பேர்களுக்குரிய உயிர் காப்பு தெப்பங்கள், 12தொன் தண்ணீர் கொள்ளக்கூடிய இடவசதி என்பனவே அதிலிருந்தன. பிரயாண நடுவில் தேவையான வழங்கல்கள் முடிவடைவதைத் தடுப்பதற்காக மிக மோசமான பங்கீட்டு முறை அமல் படுத்தப் பட்டிருக்கும்.
கப்டன் அதிசயிக்க வைக்கும் அபாயகரமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார். “நாங்கள் இதை மலேசியாவிற்குக் கூட அனுப்பியிருக்க மாட்டோம். யாராவது இறந்து போவது ஆச்சரியமில்லை, ஆனால ;(கனடா போகும் வழியில்) ஒருவர் மட்டும்தான் இறந்துள்ளார் என்பதுதான் ஆச்சரியம்” அவ்வாறு திரு. ஹரின்சூற் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பிரிவினரின் ஊகங்களின்படி கப்பல் தனது பயணத்தின் பெரும் பகுதியை தாய்லாந்துகுடாவின் சர்வதேச நீர்பரப்புகளில் அனாதரவாக தத்தளித்தவாறே கடந்திருக்கலாம். என நம்பப் படுகிறது.
ஜூன் 21ல் தென்தாய்லாந்தின் வேறொரு துறைமுகத்தில் இருந்து வேறு மூன்று கப்பலகள் புறப்பட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது. அநேகமாக அவை உணவு,தண்ணீர், மற்றும் உதிரிப்பாகங்களை சண் சீ கப்பலுக்கு எடுத்துச் சென்றிருக்கலாமென நம்பப் படுகிறது.
அதன்பின்பு எப்படியோ அக்கப்பல் கண்காணிப்பிலிருந்து விடுபட்டது, நல்லதாகப் போய்விட்டது. பின் அக் கப்பல் கனடாக் கரையில் தென்படத் தொடங்கியதும் திரு. ஹரின்சூற் தனது அலுவலகத்தில் அமர்ந்து தாய் காவல்துறையினருக்கு தனக்கு ஞாபகமுள்ள சகலதையும் சண் அன்ட் ரஸியா கோ, குணரொபின்சன், மற்றும் தான் அவர்களுக்கு விற்ற கப்பல் என்பன பற்றி விளக்குவதைக் காணக்கூடியதாக இருந்தது.
“இந்தக் கலம் இவவளவு தூரம் செல்லுமென்று நான் கனவு கூடக்காணவில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். மேலும் அது சாத்தியமற்றது எனறும் தெரிவித்தேன்”
ஒரு வீட்டிலிருந்து தொலைவில் மறு வீடு பாங்கொக்கிலுள்ள தமிழர்கள் வியாபாரிகளினாலும் புகலிடக் கோரிக்கையாளர்களினாலும் ஆன ஒரு கலவை. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் உள் நாட்டு அலுவலகம் புகலிடம் கோருபவர்களுக்கு உத்தியோக பூர்வ அகதி அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற இலகுவான ஓரிடமாகும். ஐ.நா.முகவர் அலுவலக அறிக்கைகளின்படி சுமார் 800 உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற தமிழ் அகதிகள் தாய்லாந்தின் தலைநகரில் வாழ்கிறார்கள். அவர்களில் அநேகர் ஒரு சில மாதங்களே இங்கு வாழ்கிறார்கள், பிறகு அவர்களுடனான தொடர்புகள் அற்றுப் போய்விடுகின்றன.
நீணட கால தாய்லாந்து வதிவிடக்காரரான சில தமிழர்களும் சண் சீ கப்பல் பயணப்படும் போது அதில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மையான குடியேற்றக்காரர்கள் சுற்றுலா நுழைவு அனுமதியுடன் சண் சீ கப்பல் சோங்ஹாலா வைவிட்டு புறப்படுவதற்கு சற்றுமுன்பு தாய்லாந்துக்கு வருகை தந்தவர்களே.
ஏன் நீங்கள் தாய்லாந்துக்குப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டால் “சற்று சுகமனுபவிக்க” என்று பதில் கூறும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இப்படி கூறுகிறார் ‘மெட்ராஸ் கபே’யின் மற்றொரு வாடிக்கையாளர். சமீபத்திய தமிழர்களின் வருகையை ஒட்டி‘ மெட்ராஸ் கபே’ தனது விடுதி வசதியை இரட்டிப்பாக விஸ்தரித்திருக்கறது. இவ்விடுதிக்கு வடக்கே இரண்டு கட்டடங்கள் தள்ளி இந்துத் தமிழர்களின் தலைசிறந்த ஆன்மீக மையமான பாங்கொக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் எழுந்தருளி உள்ளது.”ஆனால் அவர்கள் வருவதென்னவோ கனடா போவதற்காக” அந்த உணவகம் வெறிச்சோடியபோது ஒரு நடுத்தர வயதுள்ள மனிதர் பதற்றத்துடன் பேசினார், பேசும்போது தலையை பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தபடியே பேசினார். கடைசியில் தனது பதில்களை ஒரு கடதாசியில் எழுதிக்காட்டினார். எனவே அதை யாரும் கேட்க முடியாது.
உத்தியோக பூர்வ தாய் ஆவணங்களின்படி மே 1ல் அதிகாரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் 120 தமிழர்கள் பாங்கொக்கிலிருந்து சோங்ஹாலவை நோக்கி கூட்டமாக இரண்டு பஸ்களிலும் இரண்டு வான்களிலும்; செல்வதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அவர்கள் கடைசியாக தென்பட்டது, சோங்ஹாலா வின் புற நகர்ப்புறத்திலுள்ள சிறிய மீன்பிடிக் கிராமமான’பான் லீ’ யில்.
மே மாதத்தில் இங்கு நான்கு பேர் ஸ்ரீலங்காவையோ அல்லது இந்தியாவையோ சேர்ந்தவர்கள் இங்கு வந்து இந்தக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்களில் இருவர் மறுநாள் மற்றும் இருவரையும் அழைத்துக் கொண்டு திரும்பவும் வந்தார்கள்.அவர்கள் ஏதோ மதிப்பீடு செய்வது போலத் தோன்றியது.” பான் லீ கிராமத்தில் வசித்து வரும் டோலோஸ் சுக்குவான் என்கிற 30 வயதான தொழிலற்ற எண்ணை அகழ்வு தொழிலாளி தெரிவித்தார்.
ஆனால் அந்த குக்கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சமீபத்தில் வெளிநாட்டவர் எவரையும் கண்டதை மறுத்துள்ளார்கள். திரு. டோலோஸ் கூறுகையில் பான் லீ கள்ளச்சரக்குகளை கடலில் இருந்து வெளிக் கொண்டு வருவதற்கு மிகவும் இசைவான இடம் என்றார். “இருட்டானதும் இரவு 10 மணிக்கு மேல் எவரும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டார்கள்”
மனிதக் கடத்தற்காரர்கள் பான் லீ யையும் வேறு சில மீன்பிடிக் கிராமங்களையும் சிறுபடகுகளில் சிறு சிறு குழுக்களாக மனிதர்களை சண் சீ கப்பலில் ஏற்றுவதற்குப் பயன்படுத்தி இருக்கலாம் என தாய் அதிகாரிகள் நம்புகிறார்கள். ”தாய்லாந்தின் எந்தக் கரையிலும் அவர்கள் அதனைச் செய்திருக்கலாம், தாய்லாந்தில் ஏராளமான மீன்பிடிப் படகுகள் உள்ளன.” ஒரு தாய் கடற்படை உத்தியோகத்தர் கூறினார். அன்ரன் என உள்;ளுர்காரர்களால் அழைக்கப்படும் ஒரு பாங்கொக் தமிழனும் சண் சீயில் சென்றவர்களில் ஒருவர் என அறியப்படுகிறது. இவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் பதிவு பெற்ற அகதியாக நீண்ட காலம் தாய்லாந்தில் வாழ்ந்தவர், ஆனால் இவரது குடும்பம் ஸ்ரீலங்காவிலேயே இருந்தது. ஏப்பிரல் மாதமளவில் அன்ரன் தனது குடும்பத்தார் தாய்லாந்து வந்து தன்னுடன் இணையப் போவதாக தனது நண்பர்களிடம் கூறியிருந்தார். சண் சீ, சோங்ஹாலா வை விட்டு புறப்படுவதற்கு சற்று முன்னர் அன்ரனும் அவரது குடும்பத்தினரும் பாங்கொக்கிலிருந்து மறைந்து விட்டார்கள்.
எவ்வாறு அன்ரன் என்கிற வேஷதாரியான அகதி தனது குடும்பத்தினரை கனடாவுக்கு கூறப்படும் தொகையான 40.000 – 50,000 வரையான டொலர்களைக் கொடுத்து சண் சீ கப்பலில் இடம் பிடித்திருக்க முடியும் ? என்று கேட்கப் பட்ட கேள்விக்கு பதற்றமான உணவக ஆதரவாளன் திரும்பவும் மௌனமானார். சிறிய இடைவேளைக்குப் பின் அவர் சிறிய காகித துண்டில் எழுதிக்காட்டினார் “அவர் ஒரு எல்.ரீ.ரீ.ஈ”. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை அவர் அவ்வாறு கூறினார்.
முன்னணி மனிதர்
கிறீஸ்துராஜா குணரொபின்சன் தனது சொந்த வியாபாரத்தை நடத்துபவரைப் போலவோ, 57 மீட்டர் கப்பலை கொள்வனவு செய்யத் தகுதியுள்ளவர் போலவோ வாழக்கை நடத்தவில்லை. 30வயது நிரம்பிய அவர் 80டொலர் மட்டும் வாடகை கொடுத்து ஏழ்மையான சுற்றாடலில் மேற்கு பாங்க்கொக்கிலுள்ள ஒரு சிறிய குடியிருப்பில் வாழந்தவர். ஆவணங்களின்படி திரு.குணரோபின்சன் ஏப்ரல் 2008ல் கொழும்பிலிருந்து பாங்கொக்கிற்கு வான்வழியாக சுற்றுலா விசா மூலம் வந்தவர். ஒரு கட்டத்தில் அந்த வருட கடைசியில் அவர் தாய்லாந்தை விட்டு வெளியேறியிருந்தார். ஆனால் ஒக்ரோபரில் திரும்பவும் வியாபார விசாவுடன் தரை வழியாக மலேசியாவிலிருந்து தாய்லாந்து வந்தார். பாங்கொக்கிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம், மலேசியா வெகு காலமாக தமிழ் புலிகளின் நிதி சேகரிப்புத் தளமாகவும், கறுப்புப் பண பரிமாற்ற நிலையமாகவும் இயங்கி; வருவதாகவும் கூறுகிறது. திரு.குணரோபின்சன் மூன்று தாய் பங்காளர்களுடன் சேர்ந்து சண் அன்ட் ரஸியா கோ.லிட். ஐ காய்கறி, பழங்கள்,மற்றும் துணி வியாபார நிறுவனமாக 2008 நவம்பரில்; பதிவு செய்தார்கள். அப்போது அதன் சொத்து 2 மில்லியன் பாட் (சுமார் 65000 டொலர்) ஆக அறிவிக்கப் பட்டது. திரு.குணரோபின்சன் புதிய நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை தன்வசம் வைத்திருந்தார். அவர் தனது தொழிலை “வியாபாரி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சண் அன்ட் ரஸியா பதிவு செய்யப் பட்டபின், வேறு ஒரு பத்திரமும் பூர்த்தி செய்யப் படவில்லை. 2009 ஆண்டுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப் படவேண்டிய இறுதிக் கால எல்லை முடிவடைந்தும் அதைக் காணவில்லை. பிறகு அது ஹரின் பன்ச் 19 ஐ விலைக்கு வாங்கியது. திரு.குணரோபின்சன் இறுதியாக குடியிருந்த விலாசமுள்ள கட்டடத்தின் முகாமையாளர் கூறுகையில் திரு.குணரோபின்சன் உட்பட இங்கு குடியிருந்த இந்தியர்களையும் ஸ்ரீலங்கா காரரையும் தேடி அடிக்கடி பொலிசார் வருவதால் சலிப்படைந்த கட்டட உரிமையாளர் வெளிநாட்டவருக்கு குடியிருப்பை வாடகைக்கு விடுவதையே நிறுத்தி விட்டார் என்றார்.
திரு.குணரோபின்சனின் கடவுச்சீட்டில் அவரது பிறந்த திகதி ஏப்ரல் 13 1980 ஆகவும் பிறந்த இடம், ஸ்ரீலங்காவின் வடபகுதி தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. சண் அன்ட் ரஸியா நிறுவனத்தின் தலைவர் என்கிற தொழிலுடன் தகுதி வாய்ந்த வேலை அனுமதிப் பத்திரத்துடன் அவர் தாய்லாந்தில் தங்கியிருந்தார்.
கப்பலை தன்வசம் சொந்தமாக்கிய கூட்டத்தில் அவர் கையெழுத்திட்ட ஆவணங்களில், அவரது தாய் பங்காளிகளின் கையெழுத்து காணப்படவில்லை. அவர் தாய்லாந்து மொழி அறியாதவர், யாராவது அவரது பெயரை எங்கே ஒப்பமிட வேண்டும் என்று காட்டித் தந்தாக வேண்டும். மூன்று தசாப்தங்களாக, பெரும்பாலும் எல்லாரும் கையெழுத்திடுவது என்றால் வெறும் கிறுக்கலாக பெயரை எழுதும் போது திரு.குணரோபின்சனின் கையெழுத்து மட்டும் கொட்டை எழுத்தில் வெகு கவனத்துடன் அந்தப் பெயர் அவருக்கு பரிச்சியமற்றது போல எங்காவது பிழை நேர்ந்து விடுமோ என்கிற பயத்துடன் எழுதப் பட்டது போலிருந்தது.
சாதாரண பார்வைக்கு மறைவானது
திரு.குணரோபின்சனினதும், சண் சீ யினதும் வழித் தடங்கள் முடிவுறுவது, துறைமுக நகரமான சோங்ஹாலாவில். இங்கிருந்து வடக்காக 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலேசிய எல்லை கரடு முரடான குறுக்குப் பாதைகளினால் இணைக்கப் படுகிறது.
குறைந்தது 160 சண் சீ பயணிகளாகிலும் சோங்ஹாலாவை ஏதாவது ஒருவழியில் அடைந்திருக்க வேண்டும் என்பதை உறுதியான பல சாட்சியங்கள் எடுத்துரைத்த போதும், “குளோப் அன்ட் மெயில்” நேர் காணல் செய்த எவருமே இந்தக் குடியேற்றக்காரரை பார்த்த ஞாபகம் உள்ளதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் நகரின் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தின் கப்பற்துறை மேடைப் பணியாளர் சிலர் அறிமுகமற்ற ஒரு கலத்தை மே 19ல் கண்டதாக ஞாபகம் உள்ளது என்று கூறினார்கள். அன்றுதான் 40 தமிழர்கள் இரவு 7மணியளவில் அவர்கள் விடுதியிலிருந்து அழைத்து வரப்பட்டு படகில் ஏற்றப்பட்டு சண் சீ கப்பலுக்கு அனுப்பப் படடிருக்கலாம் எனத் தாய் அதிகாரிகளால் நம்பப் படுகிறது. அந்த பிரயாணிகள் படகு தாய்லாந்துக் கொடி, மற்றொரு வெளிநாட்டுக் கொடி என இரண்டு கொடிகளைக் கொண்டிருந்தது.
“முன்பு ஒருபோதும் கண்டிராத ஒரு அந்நியப் படகு அன்றிரவு இங்கு நிறுத்தப் பட்டிருந்தது” 37 வயதான பழைய கப்பற்துறை தொழிலாளி டோய் சுறக்காமங் நினைவு கூர்ந்தார். ”அதில் மனிதர்கள் எவரையும் நான் காணவில்லை.ஆனால் அது கப்பற் சரக்கு எதனையும் கொண்டிருக்கவில்லை.”
ஆனால் துறைமுக அதிகாரியின் குறிப்பேடுகளில் அன்று தாய் கொடியுடன் கூடிய பத்துக் கலங்களே துறைமுகதிதில் தரித்து நின்றதாகக் குறிக்கப் பட்டிருக்கிறது. இரட்டை நாட்டுரிமைக் கொடியுடைய கலம் எதுவுமில்லை. இத்துறைமுகம் எளிதில் ஊழல்கள் செய்வதற்கு அனுகூலமானது என்று நன்கு அறியப்பட்டது. பணம் மூலம் நிச்சயமாக யாரும் எதையும் பார்க்கவில்லை என உறுதி செய்ய முடியும்.” சோங்ஹாலா துறைமுகத்தில் சில முறைகேடுகள் நடந்திருக்கலாம்” பாங்கொக் கப்பற்துறை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி புன்லாம் ஜன்பண்ஜொங் தெரிவித்தார்.
தாய்லாந்திலிருந்து இயங்கிய நீணடகால சரித்திரத்தைக் கொண்ட தமிழ் புலிகள் தங்கள் நிதி சேகரிப்புக்கு வேண்டி சண் சீ கடத்தலை நடத்தியிருக்கலாம் எனப் பலராலும் நம்பப்படுகிறது. நாட்டின் கவனிப்பாரற்ற எல்லைகள் மற்றும் தலையிடாக் கொள்கையுடைய காவல் கண்காணிப்பு இவை புலிகளின் மூன்று தசாப்த சுதந்திரப் போராட்டத்தின் போது தளபாட வினியோகங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தன.
அந்த இயக்கத்தின் ஆயதக் கொள்வனவுத் தலைவர் குமரன் பத்மநாதன ;(முன்னர் பதவியிலிருந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவைத் தொடர்ந்து தற்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்) 2009ல் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்படும் வரை போரின் முக்கிய காலகட்டஙகளில் தாய்லாந்தையே தளமாகக் கொண்டு இயங்கி வந்தார்.
திரு. பத்மநாதன் பல நிறுவனங்களை இங்கு உருவாக்கியிருந்தார். பாங்கொக்கிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் கூற்றுப்படி சுற்றுலாத் தீவான ‘ புகுகெற்றலில்’; ஒரு கப்பற் பட்டறையையே உருவாக்கியிருந்தார். அங்கு மோதலின் போது பயன்படுத்துவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் வரை உருவாக்கப் பட்டது.
“தாய்லாந்து அவர்களின் செயல்களுக்கேற்ற மிக இயற்கையான ஒரு தளம். மலேசியா, இந்தோனசியா வைப்போன்று தாய்லாந்திலும் அவர்கள் மிக ஆழமாக வேரூன்றி இருந்தார்கள்.” இப்படிக் கூறுகிறார், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் பாதுகாப்பு வல்லுனரும், தமிழ் புலிகள் பற்றிய விவரங்களில் நிபுணருமான றோகான் குணரத்ன. சண் சீ கடத்தலுக்கு தமிழ் புலிகளே காரணம் என இவர் நம்புகிறார்.
சண் சீ கப்பலில் வந்தவர்களது அகதிக் கோரிக்கைகளுக்கு கனடாவின் சட்ட முறைமை எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பொறுத்து மேலும் ஒன்று அல்லது இரண்டு கப்பல்கள் கனடா புறப்படத் தயார் நிலையில் உள்ளன என்று திரு. குணரத்ன உறுதியாகக் கூறுகிறார். “ஓசன் லேடி கப்பலுக்கு கனடா எவ்வாறு பிரதிபலித்தது என்பதை அடிப்படையாக்கி சண் சீ கனடாவுக்கு வந்தடைந்தது.” இதே போன்ற ஒரு கப்பல் 76 குடியேற்றக்காரரையும் கொண்டு கடந்த வருடம் கனடாவுக்கு வந்ததை மேற்கோள் காட்டி அவர் இவ்விதம் சொன்னார்.”சண் சீ” கப்பலுக்கு கனடா என்ன பிரதிபலிப்பைக் காட்டுகிறது என்பதைப் பொறுத்து மேலும் பல படகுகள் கனடாவிற்கு வரலாம்”
ஏனென்றால் தாய்லாந்திலுள்ள நுணுக்கமான தமிழர் வலையமைப்பு மூலம் அடுத்த கப்பல் இங்கிருந்தே வரலாம் என அவர் மேலும் தெரிவித்தார். பாங்கொக்கிலும் கனடாவைப் போல அடுத்த படகு தயாராகி விட்டதென பல இரகசிய குசு குசுப்புகள் உலவுகின்றன. அடுத்த கப்பலைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? என உள்_ளுர் தமிழர்களிடம் வினாவிய பேர்து அவர்கள் ஏற்றுக் கொண்டு தலையசைத்தாலும் மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்கள்.
தாய் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு வல்லுனர்களிடம் இன்னும் ஏதாவது கப்பல்கள் வழியில வருகின்றனவா எனக் கேட்டால் சுருக்கில் மாட்டிக் கொண்டதைப்போல் திகைக்கின்றனர். அவர்கள் இன்னமும் சண் சீ எப்படி தங்கள் பிடியிலிருந்து நழுவியது என்பதைக் கண்டு பிடிப்பதிலேயே இருக்கிறார்கள். கைதுகளும் உடனடியாக ஏற்படக்கூடிய சாத்தியமில்லை.
பசுபிக் சமுத்திரத்தினூடே ஆவிக் கப்பலை அனுப்பி சாதாரண பார்வைக்கு புலப்படாத விதத்தில் ஆட்களையும் பொருட்களையும் மறைவு செய்த வலையமைப்பு இப்போது தானே மறைந்து விட்டது
நன்றி:- : குளோப்அன்மெயில்தேனீ மொழிபெயர்ப்பு : எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக