வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்க

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 50 கோடி ரூபா செலவில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டக்குழு இலங்கை வரவுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார். முற்றாக வீடுகளை இழந்த காணிகள் அற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள காணியின் அளவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய அரசாங்கத்திடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்னார் மாவட்டத்தில் 175 வீடுகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 250 வீடுகள், வவுனியா மாவட்டத்தில் 150 வீடுகள், யாழ். மாவட்டத்தில் 125 வீடுகள் என்ற அடிப்படையில் 1000 வீடுகள் இந்த முதற்கட்டத்தின் போது நிர்மாணிக்கப்படவுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடொன்றுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளதுடன், இரண்டு அறைகள் அடங்கிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிகள் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள் ளன.

கருத்துகள் இல்லை: