சனி, 28 ஆகஸ்ட், 2010

சவுதியில் உடலில் ஏற்றப்பட்ட 24 ஆணிகளை அகற்ற கம்புறுப்பிட்டியவில் சத்திரசிகிச்சை.

வறுமையின் நிமிர்த்தம் வீட்டுப்பணிப்பெண்ணாக வேலை தேடிச் சென்ற எல்.ரி ஆரியவதி மீது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் மிகவும் பாரதூரமான குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. அவரின் எஜமானர்கள் உடலில் 23 ஆணிகளை அறைந்து சித்திரவதை செய்துள்ளனர். உடலில் அத்தனை ஆணிகளுடனும் நாடுதிரும்பியுள்ள எல்.ரி.ஆரியவதிக்கு (வயது 49) மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய அரச வைத்தியசாலையில் இன்று மூன்று மணி நேர சத்திர சிகிச்சை இடம் பெற்றுள்ளது.

ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் , இரு விசேட வைத்தியர்கள் உட்பட 15 பேர் கொண்ட வைத்தியக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் 13 ஆணிகள் அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. உடலில் 24 ஆணிகள் அறையப்பட்டு இருக்கின்றன என்று எக்ஸ்ரே பரிசோதனை மூலம் முன்னர் கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு ஆணியும் 2 அங்குலம் வரை நீளம் உடையன. ஆயினும் அதிஷ்டவசமாக ஆரியவதியின் உள்ளுறுப்புக்களில் ஆணிகளால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இச்சித்திரவதை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி வழங்கி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதியமைச்சர் அதாவுட செனவிரத்தின தெரிவித்துள்ளார். இது முற்றிலும் மனித உரிமை மீறல் எனக் குறிப்பிட்டுள்ள அவர் சவுதி எஜமானிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையினை நாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட பெண்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சித்திரவதைகளின் வைத்திய அறிக்கையினை சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளதுடன் தேவை ஏற்படி எஜமானிக்கு எதிராக சவுதி நீதிமன்றில் சாட்சியளிப்பதற்கு ஆரியவதி அழைத்துச் செல்லப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: