ஞாயிறு, 6 ஜூன், 2010
குஷ்பு, கலைஞர் இல்லையென்றால் பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது
சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்டியிருப்பதாக முதல்வர் கருணாநிதியை, சோனியா காந்தியே பாராட்டினார். அப்படிப்பட்ட கட்டிடத்திற்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று 'ஒரு அம்மா' சொல்லியிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார் நடிகை குஷ்பு.
கற்பு குறித்து தான் பேசியதைக் கண்டித்து தமிழகத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்த சில நாட்களில் திமுகவில் சேர்ந்தார் நடிகை குஷ்பு.
அதன் பின்னர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தன்னை திமுக நிறுத்தினால் தயங்காமல் போட்டியிடுவேன் என்றும் கூறினார். சமீபத்தில் நடந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவின்போது பேசுகையில், ஒரு அம்மாவாக எனக்கு கருணாநிதியின் அருமை பெருமை புரிகிறது. ஆனால் இங்குள்ள ஒரு அம்மாவுக்குத் தெரியவில்லை என்று ஜெயலலிதாவை சாடினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதாவை ஒரு அம்மா என்று விளித்து சாடியுள்ளார் குஷ்பு.
திமுக மகளிர் அணி சார்பில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பெண்ணினம் போற்றும் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் சமூக சீர்திருத்தங்களா?, பொருளாதார வளர்ச்சி திட்டங்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடந்தது.
கருத்தரங்கில் பேசிய குஷ்பு,
பழைய காலத்தில் பெண்கள் தான் வல்லமை மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஆண்கள் தான் மெட்டி போட்டிருந்தார்கள். அதற்கு பிறகு தான் போகப்போக காலம் மாறிவிட்டது. பெண்கள் அடிமை மாதிரி ஆகிவிட்டார்கள்.
முதல்வர் கலைஞர் தான் 89ம் ஆண்டில் பெரியாரின் கனவான பெண்களுக்கான சொத்துரிமையை கொண்டு வந்தார். 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்க மிகவும் பாடுபட்டு வருகிறார். கலைஞர் இல்லையென்றால் இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று ஒவ்வொரு பெண்கள் சார்பிலும் சோனியா காந்தியே பாராட்டியிருக்கிறார்.
அதுமட்டுமா, வரலாற்று சிறப்பு மிக்க புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்டியிருப்பதாக அவர் பாராட்டினார். அப்படிப்பட்ட கட்டிடத்திற்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று 'ஒரு அம்மா' சொல்லியிருக்கிறார். அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்கும் தலைவர்கள் மத்தியில் அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவர் கலைஞர் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக