வியாழன், 10 ஜூன், 2010

1000 கோடி ரூபாயை வழங்குவதாக இந்தியப் பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ,டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்தியா 50,000 வீடுகளை கட்ட நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.     இந்தத் திட்டம் வடகிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக கட்டித் தரப்படும். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் இலங்கையால் கூட்டாக நிறைவேற்றப்படும்.
இந்தத் திட்டத்துக்காக இந்தியா உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்குவதாக இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக இலங்கை குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.   மன்னார் மாவட்டத்திலுள்ள புனித திருக்கேதீஸ்வரம் ஆலைய புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவும் எனவும் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய – இலங்கை உயர்மட்டக் கூட்டத்தின் போது ராமேஸ்வரம் தலைமன்னார் மற்றும் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையேயான படகு சேவை தொடங்குவது குறித்தும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.     மடு தலைமன்னார் ரயில்வே பாதையை இந்திய உதவியுடன் அமைக்கவும் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.    இந்தப் பணி இந்திய நிறுவனமான இர்கான் அமைப்பால் முன்னெடுக்கப்படும்.
அதே போன்று பலாலி காங்கேசன்துறை ரயில் பாதை புனரமைப்பு இலங்கை ரயில்வே துறையால் அமைக்கப்படும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சம்பூர் பகுதியில் மின் ஆலை அமைக்க இந்தியா உதவவுள்ளது.   இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் டாலர்கள் கடனுதவியை இந்தியா வழங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த அனல் மின்நிலையம் இந்தியாவின் தேசிய அனல்மின் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து கூட்டாக அமைக்கும்.  இருதரப்புக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் இந்திய இலங்கை உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பான்தோட்டாவில் இந்தியாவின் துணைத் தூதரகங்களை அமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: