திங்கள், 7 ஜூன், 2010

ஜெயலலிதா, ரவுடிகளைப் பார்த்து போலீஸார் பயப்படும் நிலை

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ரவுடிகளைப் பார்த்து போலீஸார் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பூந்தமல்லி அருகே ஒரு ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை, திருச்சி பஞ்சாயத்து கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் மீது திமுக கவுன்சிலர்கள் கொலை வெறித் தாக்குதல்,

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை, ஓய்வுபெற்ற காவல்துறை சார் ஆய்வர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, ஜாமீனில் வெளிவந்த இருவர் ஒசூர் அருகே வெட்டிக்கொலை,

புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப்படுகொலை, ஏ.டி.எம். மையகாவலாளி படுகொலை, சைதாப்பேட்டையில் ரவுடி கழுத்தறுத்து கொலை என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல்வேறு கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறையினர் ரவுடிகளை பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர்.

தமிழக மக்களின் முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருப்பது விண்ணை முட்டும் விலைவாசி. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்லாமல், நோட்டுப் புத்தகங்கள், காய் கனிகள், நூல், பால் மற்றும் பால் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

ஒரு கிலோ கொத்தமல்லி கட்டு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏறுவதற்கு முக்கிய காரணமே பதுக்கல் தொழிலையும், கடத்தல் தொழிலையும் ஊக்குவிப்பதால் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

20 ரூ. சாப்பாடு என்னாச்சு?

20 ரூபாய்க்கு உணவகங்களில் சாப்பாடு போடப்படும் என சென்ற ஆண்டு தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டது என்ன ஆயிற்று என்பதை கருணாநிதியால் விளக்க முடியுமா?

தமிழகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தொழில் உற்பத்தியும், வேளாண் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரியின் விலை உயர இருப்பதாக செய்தி வந்துள்ளது பற்றியும், தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலைகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாக வந்துள்ள செய்தி குறித்தும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 12 மணி நேர மின்வெட்டு நிலவுவது பற்றியும் கருணாநிதிக்கு தெரியுமா?

என்மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து அறிக்கைகள் விடுவதில் நேரத்தை வீணடிக்காமல், தமிழக மக்களின் முக்கியப்பிரச்சினைகளான சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடிநீர்ப் பிரச்சினை, தொழில் உற்பத்தி குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: