அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக சென்னையில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வரவிருக்கும் ஜூன் 8ஆம் தேதியன்று அவருக்கு எதிராக சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் அலுவலகத்துக்கு முன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே திரண்டு, அங்கிருந்து இலங்கைத் துணைத்தூதர் அலுவலகம் நோக்கிச் செல்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், பெரியார் தி.க. பொதுச் செயலர் ராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் மணியரசன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி செயலாளர் தியாகு, தமிழர் தன்மானப் பாசறையின் செயலர் ஆவடி மனோகரன் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துகொள்வார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இலங்கை தூதரகம் முன் திரளுங்கள்: வைகோ
’இலங்கையில் எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்கள சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும் போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.
இந்தியாவின் ஆயுத உதவியால்தான் போரை நடத்தி நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, அதிபர் ராஜபக்சேயும், அவர் சகோதரர்களும் பகிரங்கமாகவே கூறி விட்டனர்.
வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில் சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.
8-ந்தேதி இந்திய பிரதமரை சந்தித்து பேச அதிபர் ராஜபக்சே தலைநகர் டெல்லிக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் ரத்த தோய்ந்த கரங்களோடு வருகின்ற ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும்,
8-ந்தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்துக்கு எதிரே காலை 10 மணி அளவில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதே நாளில்,
மாவட்டத்தலைநகரங்களில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க. தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக