சென்னை: போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை விரைவாக மறுகுடியேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டும் என ராஜபக்சே டெல்லிக்கு வரும்போது வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராஜபக்சே டெல்லி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டங்களையும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில்,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலங்கையில் முகாம்களில் இருந்த அனைத்து தமிழர்களும் மறுகுடி அமர்த்தம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இன்னமும் சுமார் 80 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் வசித்து வருகிறார்கள் என்றும், அவர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மறுகுடி அமர்த்தம் செய்யப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு பொருளாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டியுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு மூலம் தங்களது மறுவாழ்வுக்கான நீதியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
எனவே, டெல்லிக்கு வரவிருக்கும் இலங்கை அதிபருடனான தங்களது சந்திப்பின்போது இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் சிறப்பு நிகழ்வாக தாங்கள் எடுத்துரைத்து இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும், மறுகுடி அமர்த்தம், மறு கட்டுமான பணிகளையும் விரைவில் மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அடுத்த நடவடிக்கையாக, டெல்லியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசும் வகையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக