செவ்வாய், 8 ஜூன், 2010

குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட பெண் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மாதவரத்தில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட பெண் குறித்த அடையாளம் தெரிந்தது.

திருவொற்றியூர் சார்லஸ் நகரை சேர்ந்தவர் முரளீதரன். இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(29). இவர்களுக்கு சுபாஷி என்ற 2 வயது மகள் உள்ளார். மாதவரம் தபால்பெட்டி அருகே உள்ள தனியார் மருத்துவனையில் கவிதா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

கவிதாவின் தாயார் அமுதா குழந்தையை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போடுவதற்காக முதல் மாடிக்கு சென்றார். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு வார்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அமுதாவுக்கு கால் ஊனம் என்பதால் குழந்தையை தூக்கிக்கொண்டு நடக்க முடியவில்லை.

இதனை பார்த்து அங்கு வந்த ஒரு இளம்பெண் அமுதாவிடம் நைசாக பேசி குழந்தையை வாங்கிக்கொண்டு முன்னாள் நடந்து சென்றார். சிறிது நேரத்தில் அந்த பெண் மாயமானார்.

வார்டுக்கு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. அதன்பிறகு தான் குழந்தையை அந்த இளம்பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து குழந்தையின் தாயார் கவிதா மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த துணிகரச் சம்பவம் குறித்து புறநகர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. குழந்தையை கடத்திச்சென்ற இளம்பெண் மருத்துமனைக்கு வெளியே உள்ள பெட்டிக்கடையில் சில்லறை மாற்றிய விபரம் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெட்டிக்கடைக்காரர் கொடுத்த அங்க அடையாளங்களின் படி மர்ம பெண் பற்றிய படம் கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்டது. இந்த படத்தில் வரையப்பட்ட பெண்ணின் உருவம், மர்ம பெண்ணின் உருவத்துடன் ஒத்திருந்தது.

கம்ப்யூட்டர் படத்தில் இருந்த படத்தை போன்று அந்த பெண் இருந்ததாக பெட்டிக் கடைக்காரரும், கவிதாவின் தாய் அமுதாவும் போலீசாரிடம் கூறினர். இந்த படத்தை காண்பித்து அந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த பெண் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையை சுற்றி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த மர்ம பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் சென்றதும் விசாரணையின் போது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது அந்த கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண்ணுடன் மேலும் ஒரு பெண் உடன் இருந்ததாக தெரிவித்தார்.இரு பெண்களும் மூலக்கடை ஜங்ஷன் அருகே இறங்கி சென்றதாகவும் அந்த ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். வரையப்பட்ட அந்த பெண்ணின் படத்தை ஆட்டோ டிரைவரும் உறுதி செய்தார். இதையடுத்து அந்த இரண்டு பெண்களையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இவர்களுக்கும், கிருஷ்ணகிரியில் குழந்தைகளைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தனலட்சுமி, சென்னையைச் சேர்ந்த ராணி, கிரிஜா ஆகியோருக்குமோ என்ற சந்தேகத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: