கன்னியாகுமரி: முள்ளூர்துறை கடற்கரையில் எழும்பிய ராட்சத அலைகளால் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய வாலிபரின் கால் ஓடிந்தது. அரையன்தோப்பு அருகே கடல்நீர் ரோட்டில் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தென்மேற்கு பகுதியில் தேங்காபட்டினம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மீனவர்களின் வீடுகள் கடல் ஓரத்தில் உள்ளன. வழக்கமாக கடலில் ஏப்ரல் மாத இறுதியில் ராட்சத அலை எழும். ஆனால் நேற்று காலையில் ராட்சத அலை எழும்பியது.
இந்த அலைகளின் சத்தம் 1 கி.மீ. தூரம் வரை கேட்டது. இந்த அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தென்னை மரங்களை வேரோடி பிடிங்கி சென்றன.
அரையன்தோப்பு அருகே தடுப்பு சுவரை தாண்டி கடல்நீர் ரோட்டில் புகுந்தது. இந்த ரோடு மினி கால்வாய் போல் மாறியது.
நேரம் ஆக ஆக அந்தப் பகுதியில் அலைகளின் தாக்குதல் அதிகரித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை:
இதற்கிடையே பெரியதாழையில் தொடர் சீற்றம் காரணமாக 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சாத்தான்குளம் அருகே உள்ளது பெரியதாழை மீனவர் கிராமம். இது தூத்துக்குடி-நெல்லை மாவட்ட எல்லையில் உள்ளது. மீன்பிடி தொழில்தான் இங்கு பிரதானம்.
கடந்த 10 நாட்களாக இந்தப் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பெரியதாழை பஞ்சாயத்து தலைவர் ஜோசப் கூறும்போது, 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு பெரியதாழையி்ல் கடல் சீற்றம் அதிகமாகி விட்டது. இதையொட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அது போதவில்லை. இன்னொன்று அமைத்தால்தான் கடல் சீற்றத்தில் இருந்து ஓரளவு தப்ப முடியும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக