போலி பாஸ்போர்ட்: திருச்சி கும்பலில் ஒருவர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்றுத்தரும் கும்பலை சேர்ந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2009ல், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களுடன், மேலும் இரண்டு பேர் வந்தனர். இவர்கள் வைத்திருந்த ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மீது சந்தேகப்பட்ட வருவாய்த் துறையினர், விசாரித்தனர். இதையறிந்த நான்கு பேரும் தப்பி விட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜீவகனி, திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், அருண்குமார் ஆகியோர் போலியான பெயரில் விண்ணப்பித்துள்ளதும், அவர்கள் கொடுத்த முகவரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இந்த கும்பல், திருச்சியில் இருந்ததை அறிந்த போலீசார், கும்பகோணத்தை சேர்ந்த வடிவேல்(39) என்பவரை கைது செய்தனர்.
கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் கூறியதாவது: பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டுகளை வைத்து, நாங்கள் விசாரணை நடத்தினோம். திருச்சியை சேர்ந்த சிவா, இவரது நண்பர் கும்பகோணத்தை சேர்ந்த வடிவேலு இருவரும், வத்தலக்குண்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, முரளிதரன் குடும்பத்தினரிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, ரேஷன் கார்டை பெற்றனர். இந்த கார்டை, திருச்சியில் பாஸ்போர்ட் வாங்கித்தரும் ஏஜன்ட் சுதாகர் என்பவரிடம் கொடுத்தனர்.
இவர், இலியாஸ் என்பவர் மூலம் போலி ஆவணம் தயாரித்து, பாஸ்போர்ட் பெற்று, இலங்கைக்கு ஆட்களை அனுப்புவது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக, திருச்சியை சேர்ந்த விஸ்வா என்ற மற்றொரு ஏஜன்ட்டும் இருந்துள்ளாõர். தற்போது, வடிவேலுவை மட்டும் கைது செய்துள்ளோம். இந்த கும்பலின் முக்கிய நபரான சுதாகரை கைது செய்தால் தான் முழுவிவரமும் தெரியவரும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக