ஞாயிறு, 6 ஜூன், 2010

அன்புமணிக்கு பதவி பெறுவதற்காகபா.ம.க., மேற்கொண்ட முயற்சிகள்

அன்புமணிக்கு பதவி பெறுவதற்காக, "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத' விக்கிரமாதித்தன் போல், பா.ம.க., மேற்கொண்ட முயற்சிகள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்து, ராஜ்யசபா எம்.பி., பதவி ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டுமென, முதல்வர் கருணாநிதிக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை, உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்த முதல்வர், பா.ம.க.,வுக்கு அடுத்த ராஜ்யசபா தேர்தலின் போது, "சீட்' ஒதுக்கப்படுமென தெரிவித்திருந்தார்.அத்துடன், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று பேரின் பெயரையும் அறிவித்தார். அன்று இரவே, செல்வகணபதியும், கே.பி.ராமலிங்கமும் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். வெளியூரில் இருந்ததால், மற்றொரு வேட்பாளரான தங்கவேலு அன்று முதல்வரை சந்திக்கவில்லை.தங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதற்காகத் தான் தங்கவேலுவின் பெயரை, பெயரளவில் அறிவித்துள்ளதாக பா.ம.க.,வினர் கருதினர்.

இதன்பின், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் கருணாநிதியை சந்திக்க, ராமதாஸ் அனுப்பி வைத்தார். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் பா.ம.க.,வினர் சந்தித்தனர். அப்போது பா.ம.க.,வினர், "தங்கவேலுவுக்கு பதிலாக பா.ம.க.,வுக்கு, சீட் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் வந்தோம்' என்று கூறியுள்ளனர்.

அதற்கு முதல்வர் கருணாநிதி, "தாழ்த்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக அறிவித்துவிட்டு பின்னர் மாற்றினால், எந்தளவு பிரச்னை வரும் என்பது அரசியல் கட்சி நடத்தி வரும் உங்களுக்குத் தெரியாதா?' என்று திருப்பிக் கேட்டுள்ளார்.அத்துடன் விடாமல், பா.ம.க.,வுக்கு இடம் தர மறுத்த தி.மு.க.,வின் தீர்மானத்தை பாராட்டி, அன்று வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்று எழுதிய கட்டுரையை முதல்வர் காட்டினார். அந்தக் கட்டுரையை வாசித்துக் காட்டுமாறு துரைமுருகனிடம் கூறியுள்ளார். துரைமுருகனும் அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து கட்டுரையை வாசித்துக் காட்டியுள்ளார்.

பா.ம.க.,வினரிடம், "என்னைத் தவிர தி.மு.க.,வில் ஒருவர் கூட உங்களுக்கு ஆதரவாக இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "வெளியே போய், அன்புமணிக்கு சீட் கேட்டோம். மறுத்து விட்டனர் என்று சொன்னால் அசிங்கம். எனவே, கூட்டணியில் சேர்க்க முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிக்க வந்ததாக கூறுங்கள்' என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படியே, வெளியே வந்த பா.ம.க.,வினரும் நிருபர்களிடம் தெரிவித்தனர்.அத்துடன் நிற்காமல், தங்களுக்கு அ.தி.மு.க., வசம் இருந்து அழைப்பு வருவது போல செய்தியை பா.ம.க.,வினர் பரவ விட்டனர். அப்படி நடந்தால், உடனே முதல்வர் அழைத்து சீட் கொடுப்பார் என்று நம்பினர். ஆனால், அந்த செய்தி வெளியானதும், அ.தி.மு.க., வேட்பாளர்களது பெயர்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால், பா.ம.க.,வின் திட்டம் நிறைவேறாமல் போனது.தி.மு.க.,வின் தீர்மானத்திற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், இறுதிவரை பா.ம.க., பரிதவித்து வருகிறது. எம்.பி., பதவியை பிடிக்க, பா.ம.க., மேற்கொண்ட தொடர் முயற்சிகள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டருக்கு "அதிர்ச்சி வைத்தியம்' :

பா.ம.க., விஷயத்தில், தி.மு.க., எடுத்துள்ள முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வரின் அரசியல் முதிர்ச்சியையே இந்த முடிவு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்."ஒரு கூட்டணியில் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, குறுகிய காலத்தில் அணி மாறி இன்னொரு கூட்டணியில் பதவி பெறுகிற கட்சி' என்பது தான் பா.ம.க., மீது அனைத்து தரப்பினரும் சுமத்தி வந்த குற்றச்சாட்டு. தற்போது, தி.மு.க., எடுத்துள்ள முடிவின்படி, பா.ம.க., கூட்டணியில் சேர்க்கப்பட் டுள்ளது. ஆனால், பலன் இல்லை.வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் இருந்து உழைக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி உழைத்து, அணி தாவாமல் இருந்தால் மட்டுமே, 2013ம் ஆண்டு வரவுள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு சீட் கிடைக்கும்.இதன்மூலம், அடுத்த இரண்டு தேர்தல்களுக்கு அணி தாவ முடியாதபடி, டாக்டருக்கு, "அதிர்ச்சி வைத்தியம்' கொடுத்து, தி.மு.க.,வின் முடிவு அமைந் துள்ளதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை: