மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை, டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ்,. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியப்படி, முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவது, அதிகாரப் பகிர்வு, மறுசீரமைப்புக்கான உதவிகளை விரைவுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போர் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. தமிழர்கள் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னோம். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். இது ஒரு சின்ன நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
கலைஞர் முள்வேலி முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு 54 ஆயிரம் தமிழர்கள்தான் முகாம்களில் இருப்பதாக ராஜபக்சே கூறினார். அவர்களையும் விரைவில் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியிருக்கிறார். தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகளை காணுமாறும் வலியுறுத்தினோம்.
பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சே இடையே நடைப்பெற்ற சந்திப்பின்போது தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருத்திருக்கிறார். தேவைப்பட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும், இலங்கை தமிழர்களின் எதிர்கால வாழ்வுக்கு பல உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக ராஜபக்சேவிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக