ஞாயிறு, 6 ஜூன், 2010

நடிகை ரோஜா, அரசியலில் பெண்களை ஆண்கள் அடக்க பார்க்கிறார்கள்.

அரசியல் வெறுத்துடுச்சி... இனி சினிமாவில் முழு கவனமும் செலுத்தப் போகிறேன், என்கிறார் நடிகை ரோஜா.

ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல படங்களில் நடித்த ரோஜா தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் பரபரப்பாக செயல்பட்டார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் தெலுங்கு தேசத்திலிருந்து தாவி, காங்கிரஸில் இணைந்தார். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.

இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். காவல்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் பல பிரச்சினைகளை சந்தித்தேன். பொதுமக்கள் நலனுக்காக கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம் என்று சுற்றினேன். குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை. உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களிலும் பங்கு பெற்றேன்.

நான் எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் ஒன்றும் செய்யாதவர்களையே விரும்புகிறார்கள். அரசியலில் பெண்களை ஆண்கள் அடக்க பார்க்கிறார்கள். அங்கு பெண்களால் தாக்குபிடிக்க முடியாது. அரசியலை வெறுத்துவிட்டேன்.

சமூகசேவையில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். பதவி இருந்தால்தான் அதை செய்ய முடியும். எனவே திரும்பவும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அம்மா, அக்கா என எந்த வேடம் ஆனாலும் ஏற்பேன். விஜய் அம்மாவாக நடிப்பது மகிழ்ச்சி. திரையுலகில் நிறைய புதுப்புது கதாநாயகிகள் வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மக்கள் ரசனை மாறுகிறது.

ஒரே உணவை தொடர்ந்து சாப்பிட்டால் பிடிக்காது. ஏற்கனவே பார்த்த கதாநாயகிகளையே திரும்ப திரும்ப பார்ப்பது இல்லை. புதுநாயகிகள் வந்தால்தான் பார்க்கிறார்கள். சினிமாவில் கிளாமர் மட்டுமே காட்டி ஜெயிக்க முடியாது. திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்..." என்றார் ரோஜா.


நெஞ்சினிலே படத்தில் 'தங்க இடுப்புக்கு தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா..' என்று ரோஜாவுடன் விஜய் போட்ட குத்தாட்டம் நினைவிருக்கலாம்!

கருத்துகள் இல்லை: