வியாழன், 10 ஜூன், 2010

ஆறுஇராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது ,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக

முல்லைத்தீவு, விசுவமடு மாணிக்கபுரத்தில் அண்மையில் மீளக்குடியேறிய இளம் தாயொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ஆறு இராணுவத்தினரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிபதி, அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் பணித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவே இந்த இளம் தாய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு படையினரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, அனைவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற இராணுவத்தினர் இவருடனும் இவரின் தாயாருடனும் உரையாடி விட்டுச் சென்றுள்ளனர்.
மீண்டும் அன்று நள்ளிரவு வேளை இவரது வீட்டிற்குச் சென்ற 6 இராணுவத்தினர் அங்கிருந்த இந்தப் பெண்ணின் தாயாரையும் தம்பியையும் கட்டிப் போட்டுவிட்டு இவரை அருகிலுள்ள ஆட்களற்ற வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.அங்கு வைத்து ஆறு இராணுவத்தினரும் இப்பெண்ணை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். வேதனையால் அப்பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.மயக்கம் தெளிந்த அந்தப் பெண் எழுந்து தனது வீட்டிற்குச் சென்றபோது அங்கு தாயாரும் சகோதரனும் கட்டிப் போடப்பட்டுக் கிடப்பதை அவதானித்துள்ளார்.
பொழுது விடிந்ததும் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்ற இவர்கள் நடந்த சம்பவங்களை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். அத்துடன், இது குறித்து இராணுவப் பொலிஸாருக்கும் முறையிடவே அவர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்று பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரையும் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நேற்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். ஆறு படையினரையும் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அந்த இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரையும் கைதுசெய்யப்பட்ட ஆறு இராணுவத்தினருடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய அதிகாரியின் உதவியுடன் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதேநேரம், இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரில் நால்வருக்கு நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலிஸாரினால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட இவர்களிடம் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஸ்ரீதரன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: