இலங்கையில் நடைபெற்ற யுத்தம் வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மாத்திரமல்ல. அது ஒரு கம்பனித்துறை யுத்தமாகும்.
இந்தியாவின் அனைத்து பெரிய கம்பனிகளும் அதிக பணம் சம்பாதிப்பதற்காக தற்போது இலங்கையை நோக்கிச் செல்கின்றன என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக நீதி ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார்.
இந்தியாவின் அனைத்து பெரிய கம்பனிகளும் அதிக பணம் சம்பாதிப்பதற்காக தற்போது இலங்கையை நோக்கிச் செல்கின்றன என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக நீதி ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலையை தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் மாத்திரமே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் மௌனம் காப்பதையே தெரிவு செய்தனர். இதேபோன்ற நிலைதான் மத்திய இந்தியாவில் இயற்கை வளங்கள் கம்பனிகளால் கைப்பற்றப்பட்டதை பழங்குடியினர் எதிர்த்தபோது ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பழங்குடி இனமக்கள் மீதான பச்சை வேட்டை மற்றும் இன அழிப்பு தாக்குதல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அருந்ததி ராய் இவ்வாறு கூறியுள்ளார்.
பழங்குடியினரின் பாரம்பய வீடுகள் நிலங்கள் காடுகள் ஆறுகள் என்பனவற்றை கையகப்படுத்திய வணிகநிறுவனங்களின் தரப்புக்கே அரசாங்கம் ஆதரவளித்தது. இந்நடவடிக்கை நீங்கள் எமது பக்கம் இல்லாவிட்டால் எம்மை எதிர்க்கிறீர்கள் என்ற புஷ்ஷின் கொள்கையை பின்பற்றுவதாகும். வணிக நிறுவனங்களின் இந்த கையகப்படுத்தல்களை எதிர்ப்பவர்கள் காந்தியவாதிகளாகவோ பழங்குடியினரகாவோ மாவோயிஸ்ட்டுகளாகவோ யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாவோயிஸ்டுகள்தான் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரதமர் கூறினார். ஆனால், அவர் அப்படி கூறியபோது, ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் பெரும்பாலும் அடியோடு துடைக்கப்பட்டிருந்தார்கள். பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே சுரங்க குழுமங்களின் பங்குகளின் விலை திடீரென உயர்ந்தன. பங்குச்சந்தையில் அவர்கள் பெரும் லாபத்தை ஈட்டினார்கள்.
2005 – 06 ஆம் ஆண்டுகளில் பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், எஸ்.ஆர். உருக்கு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசு மேற்கொண்டது. அந்த நேரத்தில் பழங்குடியின மக்களுக்கு எதிராக சல்வார் ஜூடும் என்ற படை அமைக்கப்பட்டது.
ஒப்பந்தம் செய்து கொண்ட பெரிய நிறுவனங்களுக்காக பழங்குடியின மக்கள், அவர்கள் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த முயற்சியில் 680 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பெண்கள் சித்தரவதை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கு, கூட்டம் கூட்டமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தனர்.
இப்போது மீண்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறிக்கொண்டு, அப்பாவி பழங்குடியின மக்களுக்கு எதிராக மத்திய அரசு போர் நடத்தி வருகிறது. இவை அனைத்தும் கனிம வளம் மிக்க அவர்களுடைய நிலத்தை அபகரிப்பதற்காக செய்யப்படுகின்றன. இலங்கை அரசைப் போன்று கூட்டம் கூட்டமாய் மக்களை கொன்று குவிக்க இந்திய அரசு துணியாது. இந்திய அரசு சூழ்ச்சிகர அரசு. மெல்ல மெல்ல இனப்படுகொலை செய்வதில்தான் நம்பிக்கை வைத்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அருந்ததிராய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக