மின்னம்பலம்: ‘எதற்கெடுத்தாலும்
போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்’ என்று நடிகர்
ரஜினிகாந்த் கூறியதற்குப் பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு தலைவர்களும் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கினால், தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு தலைவர்களும் ரஜினியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





































