“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.
சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது.







