சனி, 19 செப்டம்பர், 2026

சவுதியில் சிக்கி கொண்ட இளைஞனின் உயிர்

 வீரகேசரி : மகனை விடுவித்து தாருங்கள் மடிப்பிச்சையாக கேட்கிறேன் ; சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் கண்ணீர் மல்க உருக்கம் - ilakkiya info
எனது மகன் செய்தது தவறுதான். அதனை மன்னித்து எனது மகனை விடுவத்து தாருங்கள். அதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திடம் ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசாங்கத்தினரும் நாட்டின் அனைவரும் உதவிடுங்கள். உங்களிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கின்றேன் என்று சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தாயாரான சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.



சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்தைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியாலும் அபராதமாக விதிக்கப்பட்ட சிவராசா அனோஜன் மேற்கொண்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரதண்டனையை நேற்று வியாழக்கிழமை விதித்துள்ளது.

குறித்த தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட சிவராசா அனோஜன் தனது குடும்பத்தினருக்கு குறித்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளதை அடுத்தே அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனையடுத்து நற்பிட்டிமுனையில் உள்ள வீட்டிலிருந்து அனோஜனின் தாயார் வெளிப்படுத்திய கருத்துக்களின்போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், 'எனது மகன் செய்தது தவறுதான். அதனை மன்னித்து எனது மகனை விடுவத்து தாருங்கள் அதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திடம் ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசாங்கத்தினரும் நாட்டின் அனைவரும் உதவிடுங்கள். உங்களிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கின்றேன். 

நான் பத்துமாதம் சுமந்து வளர்த்த எனது மகனை மீட்டுத்தாருங்கள். எனக்கு எதுவும் வேண்டாம் அவரை என்னிடத்தில் ஒப்படைத்தாலே போதுமானது. தயவு செய்து மன்னிப்பளித்து அவரை எம்முடன் இணைத்து விடுங்கள்' என்று அனோஜனின் தாயார் குறிப்பிட்டார்.

சர்ச்சையும் முதற்தண்டனையும்

மட்டக்களப்பு, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் புலம்பெயர் தொழிலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், கதிர்காம யாத்திரை ஆரம்பமானபோது யாத்திரீகர்களைத் தொடர்ந்து வந்த 'சுப்பிரமணி' என்ற நாய் தொடர்பாக முகநூலில் செய்த பதிவு தொடர்பில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட நிகழ்நிலை விவாதத்தின் போது அனோஜன் வெளியிடப்பட்ட கருத்துக்கள் நபிகளை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து அவர் தான் செய்த தவறை உணர்ந்து 5 முதல் 10 வரையிலான நிமிடங்களுக்குள் முகநூல் கருத்தை நீக்கிவிட்டார். அத்துடன், இஸ்லாமியச் சமூகத்திடம் மன்னிப்புக் கோரும் காணொளியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

எனினும், அதற்குள் அவரது கருத்தின் பதிவுகள் தீவிரமாகப் பகிரப்பட்டு, சவூதி அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதனையடுத்து, சவூதி அரேபியாவின் கடுமையான இணையக் குற்றத் தடுப்புச் சட்டம் (Anti-Cybercrime Law) மற்றும் மத நிந்தனை சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து அவர் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனைக்குறைப்பு முயற்சியும் மேன்முறையீடும்

இதனையடுத்து அனோஜனின் குடும்பத்தினர் குறித்த பெருந் தொகையை அபராதமாகச் செலுத்த முடியாத நிலையில், அவருடைய தண்டனையையும், அபராதத்தையும் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் ஊடாகவும் பெற்றோர் கோரிக்கைகளை முன்வைத்ததோடு, மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம், இலங்கை அரசாங்கம் ஆகிய தரப்புக்கள் சவூதி மன்னரின் பொதுமன்னிப்பின் ஊடாக அனோஜனை விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

அத்துடன் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் (தீர்ப்பு வழங்கப்பட்டதில் இருந்து 30 நாட்கள்) காணப்பட்ட நிலையில் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலம் முறையான சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் அனோஜனின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 24 ஆகஸ்ட் 2026 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 1,890,766 ரூபா சட்டக்கட்டணம் வெளிநாட்டு அமைச்சின் வங்கிக் கணக்கிற்கு அனோஜனின் குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளபோது, அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட காலஅவகாசத்தில் அனோஜன் தொலைபேசி ஊடாக தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதாக அவரது சகோதரர் சிவராசா கம்சிகன் உறுதிப்படுத்தினார்.

இதேநேரம், அனோஜனின் சகோதரரான சிவராசா கம்சிகன், தனது சகோதருக்கு சட்ட உதவியை வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட சட்டத்தரணிக்கு பதிலாக பிறிதொரு சட்டத்தரணியே மன்றில் ஆஜரானதோடு அதற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று தனது சகேதாரர் குறிப்பிட்டுள்ளதாகவும், எந்தச் சட்டத்தரணி ஆஜரானார் அவருடைய விபரங்கள் என்ன, தண்டனை சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எவையும் வெளிவிவகார அமைச்சிடமிருந்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் உள்ளிட்டவர்களை பல தடவைகள் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்தபோதும் அது பலனளித்திருக்கவில்லை. அதேநேரம், இலங்கைக்கான சவூதி தூதரகமும் இந்த விடயம் சம்பந்தமாக தமக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் எவையும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது

.


கருத்துகள் இல்லை: