சனி, 2 பிப்ரவரி, 2019

அன்புமணிக்கோ திமுக கூட்டணி மீது காதல் .. அமித் ஷாவுக்கோ பாமக மீது காதல் .. எங்கே செல்லும் இது ?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: பாமகவை நெருக்கும் பாஜக!“கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருக்கிறது பாமக. பாமகவின் ஒவ்வொரு மூவ்களையும் மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். லேட்டஸ்ட் மூவ்களைப் பற்றி சொல்கிறேன். அதிமுக கூட்டணியில் பாமகவும் இருக்க வேண்டும் என அதிமுக நினைக்கிறது. இது சம்பந்தமாக பேச தளவாய் சுந்தரமும், முதல்வர் எடப்பாடியின் ஆல் இன் ஆல் ஆக இருக்கும் சேலம் ஆத்தூர் இளங்கோவனும் தைலாபுரம் தோட்டத்துக்கே சென்று ராமதாஸை சந்தித்து வருகிறார்கள்.

ஆனால், அன்புமணிக்கோ திமுக கூட்டணிக்கு போவதுதான் விருப்பம். ஆனால், பாமகவை எப்படியாவது வளைத்துப் போட வேண்டும் என பாஜகவின் பிரஷ்ஷர் அதிமாகவே இருக்கிறது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சென்னையில் இருக்கும் நிதி நிறுவன அதிபர் ஒருவரை அழைத்துப் பேசியிருக்கிறார். ‘அதிமுக கூட்டணியில் பாமக வருவதை அன்புமணி தான் விரும்பாமல் தவிர்த்து வருகிறார். நீங்க அன்புமணியிடம் நேரில் பேசுங்க...’ என்று சொல்லியிருக்கிறார். அந்த நிதி நிறுவன அதிபரும் அன்புமணியிடம் பேசியிருக்கிறார். அப்போது அன்புமணி சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார். ’இதெல்லாம் செஞ்சு கொடுக்க முடியுமா? என கேளுங்க” என அன்புமணி கேட்க... அதைக் கேட்டு நிதி நிறுவன அதிபரே மலைத்துவிட்டாராம். அன்புமணி சொன்னதை எல்லாம் அப்படியே அமித் ஷாவிடம் சொல்லியிருக்கிறார். விட்டுப் பிடிக்கலாம்..’ என்று சொன்னாராம் அமித் ஷா.
அன்புமணி எதிர்பார்க்கும் தகவல் இன்னமும் திமுக தரப்பில் இருந்தும் வரவில்லை.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“கடந்த ஜனவரி 16-ம் தேதி மற்றும் ஜனவரி 30-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச லேப்டாப் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறோம். அதன் ஃபாலோ அப்தான் இது.
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச லேப்டாப்க்கான டெண்டர் இந்த ஆண்டு லெனோவா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டரில் குறிப்பிடப்பட்ட 480 சிஸ்மார்க் திறன் கொண்ட லேப்டாப்க்கு பதிலாக 260 சிஸ்மார்க் திறன் கொண்ட லேப்டாப் கொடுக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகும், அவருக்கே தெரியாமல் செயல்திறன் குறைவான லேப்டாப்புக்கு நிதித் துறை செயலர் சண்முகம் மூலமாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஜாக்டோ ஜியோ போராட்டம் இருப்பதால் நடப்பது முதல்வருக்கு தெரியாது என அதிகாரிகள் தப்பு கணக்குப் போட்டார்கள். மின்னம்பலத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த தில்லுமுல்லை கடந்த 30-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் சுட்டிக் காட்டியிருந்தோம். அது முதல்வர் பார்வைக்கு உடனடியாகப் போயிருக்கிறது. டென்ஷன் ஆன முதல்வர் எடப்பாடி, 31-ம் தேதி மதியம் முதலில் நிதித் துறை செயலர் சண்முகத்தை வரவழைத்திருக்கிறார். தொடர்ந்து ஐடி செகரெட்டரி சந்தோஷ்பாபுவையும் வரவழைத்திருக்கிறார்.
’என்கிட்ட என்ன லேப்டாப்பு ஒப்புதல் வாங்குனீங்க? இப்போ எந்த லேப்டாப்புக்கு ஆர்டர் கொடுத்து இருக்கீங்க?’ என்று முதல்வர் கேட்க... ‘அது வந்து சார்... அதைவிட இது 100 ரூபாய் விலை குறையுது. அரசுக்குதான் லாபம்.’ என்று சொல்லி இருக்கிறார். ஒரு லேப்டாப்புக்கு 1500 ரூபாய் குறைச்சாலும் அந்த லேப்டாப்புக்கு இணையாக இது வராது.
என்னை என்ன -----ன்னு நினைச்சீங்களா?’ என்று ஆரம்பித்து சில காட்டமான வார்த்தைகளால் திட்டி தீர்த்திருக்கிறார். ‘ஏற்கெனவே என்கிட்ட ஒப்புதல் வாங்கின 480 செயல் திறன் இருக்கும் லேப்டாப்தான் மாணவர்களுக்கு கொடுக்கணும். இதுல ஏதாவது தில்லு முல்லு செய்ய பார்த்தீங்கன்னா என்னோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்க வேண்டியிருக்கும்... 18-ம் தேதி என்கிட்ட ஓகே வாங்கின ஆர்டரை அப்படியே செயல்படுத்துங்க...’ என்று சொல்லி அவர்களை அனுப்பியிருக்கிறார். அதன்படியே பழைய ஆர்டரே இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
‘ஒரு நல்ல லேப்டாப்பை பசங்களுக்கு கொடுக்க நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. நான் சொல்றதை கேட்க கூடாதுன்னு திட்டமிட்டு அதிகாரிங்க வேலை பார்க்கிறாங்க..’ என்று அந்த நேரத்தில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. சண்முகமும், சந்தோஷ்பாபுவும் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சாக இருக்கிறது. “என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது. அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: