வியாழன், 31 ஜனவரி, 2019

தமிழகத்தில் மோடி கூட்டணி :அதிமுகவுக்கு 20, - பாஜகவுக்கு10, - பாமகவுக்கு 5, -தேமுதிக 4, - புதிய தமிழகம் 1 ..

டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி:  மோடி மேடையில்  அறிவிப்பு?
மின்னம்பலம் : இது
அதிமுக கூட்டணி பற்றிய செய்திக்கான முன்னோட்டமாகத்தான் இருக்கும் என்று யூகித்து முடிப்பதற்குள், அதிமுக கூட்டணி பற்றிய செய்தியே வந்து விழுந்தது.
“அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மாலை அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் தேர்தல் வியூகம் பற்றியும் அப்போதே ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றும்போது சொன்ன சில விஷயங்களை இப்போது நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.
‘அம்மா இருந்த கட்சிக்கும் அம்மா இல்லாத கட்சிக்கும் வித்தியாசத்தை நாம உணர்ந்திருக்கோமான்னு தெரியல. அம்மா காலத்துல நாம பெரிய அளவுல தோத்திருக்கோம். ஆனா அதையும் தாண்டி பெரிய அளவுல அம்மாவே நமக்கு ஜெயிச்சுக் கொடுத்திருக்காங்க. அதுக்குக் காரணம் அம்மாவோட ஃபேஸ் வேல்யூ. ஆனா இப்ப நம்ம கட்சில யாருக்கும் அந்த ஃபேஸ் வேல்யூ இல்லைங்குறத நாம ஒத்துக்கணும். அம்மா இல்லாம நாம தேர்தலை சந்திக்கப் போறோம். அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசிக்கணும். நாம என்ன பண்ணியிருக்கோம்னு யோசிக்கணும்’ என்று அன்றே பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.

அதாவது அதிமுகவில் இப்போது தனக்கோ, எடப்பாடிக்கோ ஃபேஸ் வேல்யூ இல்லை, எனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குவோம் என்று சொல்லி மோடியை முன்னிறுத்தி சந்திப்பதுதான் அப்போதே ஓ.பன்னீரின் பிளான். இதனால்தான் தொடர்ந்து அதிமுக -பாஜக கூட்டணியை அவர் கட்சிக்குள் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் எடப்பாடியோ யோசிக்கிறார். ஆனால் தனக்கான டெல்லி விவகாரங்கள், எடப்பாடியின் தலைமைமேல் தொங்கும் கத்திகள் என பலவற்றைக் காரணம் காட்டி எடப்பாடியை சரிக்கட்டி, அதிமுக -பாஜக கூட்டணிக்கு முடிவே செய்துவிட்டார்கள். மேலும் இக்கூட்டணியில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் இடம்பெறுவதை ஏற்கனவே பல்வேறு திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடித்துவிட்டது அதிமுக.
அதிமுக 20 இடங்களில் போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது, பாஜகவுக்கு10 இடங்களும், பாமகவுக்கு 5 இடங்களும், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 என்ற நிலைமையில் தற்போதைய சீட் ஷேரிங் இருக்கிறது. இதில் பாமகவுக்கான 5 இடங்களில் புதுச்சேரியும் அடக்கம் என்கிறார்கள். இதில் யாருக்கு எந்தத் தொகுதி என்பதில்தான் பெரும் பிரச்னைகள் வெடிக்கக் காத்திருக்கின்றன.
கள்ளக்குறிச்சியை தேமுதிகவுக்குக் கொடுக்கக் கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம் கொதிக்கிறார். கடலூரை பாமகவுக்குக் கொடுக்கக் கூடாது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் எதிர்ப்பு தெரிவிக்கிறார். திருப்பூர் தொகுதியில் தற்போதைய எம்.பி, சத்யபாமா மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியும், மத்திய அமைச்சர்களை சந்தித்தும் அதிமுக எம்.பி.க்களிலேயே ஆக்டிவ்வான எம்பிக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவரும் கூட. இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் திருப்பூரை பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசனுக்கு கேட்கிறது பாஜக. திருப்பூர் தொகுதிக்காக டெல்லி வரை அழுத்தம் கொடுத்து வைத்திருக்கிறார் வானதி. பிரதமர் மோடி தனது அடுத்த பிரசார ஸ்பாட்டாக திருப்பூரைத் தேர்ந்தெடுத்ததே வானதிக்காகத் தான். ஆனால் சத்யபாமாவிடம் இருந்து திருப்பூரை யாருக்கும் தரக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் அதிமுக-பாஜக கூட்டணிஅமைந்திருக்கிறது. ஆனால் இதை இப்போதைக்கு அறிவிப்பதாக இல்லையாம். பாஜக கொடுக்கும் அழுத்தம் காரணமாக, அனேகமாக பிப்ரவரி 10 ஆம் தேதி மோடி திருப்பூர் வரும்போது அந்த மேடையிலேயே கூட்டணி அறிவிக்கப்படலாம் ” என்று மெசேஜ் முடிந்தது.

கருத்துகள் இல்லை: