புதன், 30 ஜனவரி, 2019

கிரிஜா வைத்தியநாதன் கடும் எச்சரிக்கை : ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை!

ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை!மின்னம்பலம் : ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை! ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை! தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினத்துக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் உட்பட பலரும் ஆதரவளித்துள்ளனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (ஜனவரி 30) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவளித்த தலைமைச் செயலக ஊழியர்கள் எட்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊதியம் வழங்கப்படாது எனவும் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
“தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, போராட்டத்தில் பங்கேற்பது அல்லது போராட்டம் நடத்த இருப்பதாக அச்சுறுத்துவது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்பது போன்ற நடவடிக்கை ஈடுபடுவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் 1973இல் உள்ள 20, 22, 22ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் விதிமீறலாகக் கருதப்படும்.
அவ்வாறு ஈடுபடும் ஊழியர் மீது அதற்கான விதியின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலைக்கு வராத நாளை, அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகக் கருத வேண்டும். வேலை இல்லை என்றால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சம்பளமோ, சலுகையோ வழங்கக் கூடாது. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கான விதிகளை யாரும் மீறாதபடி கவனிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத விடுப்பில் இருந்து கடமை தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனவரி 30ஆம் தேதியன்று அவசர நிலையில் உள்ளவர்கள் தவிர, மற்ற யாருக்கும் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படக் கூடாது. விடுப்பின் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது ஊழியர்களின் கடமை.
எனவே அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், வேறு நாட்களில் நடக்க இருக்கும் போராட்டங்களைக் கவனித்து, விதிமீறல் குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும். வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்கள் பற்றிய விவரங்களையும், அந்த நாள் முழுவதும் பணியில் ஊழியர்கள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து விவரம் அனுப்ப வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த துறைச் செயலாளர்கள் மூலமாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: