ஞாயிறு, 27 ஜனவரி, 2019

நியூசிலாந்தை நோக்கி படகில் சென்ற 230 பேர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை..


தினமணி - வெற்றிச்செல்வி : கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் 230 பேர் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 11 அன்று கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து 50 பேரின் உடைமைகளை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்களூர் கோயிலில் கைப்பற்றிய கேரள பொலிஸார், படகு வழியாக நியூசிலாந்து செல்லும் முயற்சியில் 50 பேர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டனர். இந்த நிலையில், அடுத்தடுத்த நாளில் கொச்சி அருகே உள்ள முன்னம்பம் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகள், துணிகள், ஆவணங்கள் மூலம் 230 பேர் சென்றிருக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

இதில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பது மேலும் அதிர்ச்சியடைய வைக்கின்றது. பொலிஸாரின் தகவலின் அடிப்படையில், இப்படகு நியூசிலாந்தை நோக்கி ஜனவரி 12 புறப்பட்டிருக்கக்கூடும் என சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி, தெற்கு டெல்லியைச் சேர்ந்த பிரபு என்ற 29 வயது தமிழ் இளைஞரை கடத்தலில் தொடர்புடையவராக கேரள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிறீகாந்த், ரவீந்திரா, சாந்த குமாருடன் தொடர்புடைய நபராக இவர் அறியப்பட்டுள்ளார். கேரள பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இப்பயணத்திற்காக தேவ மாதா என்ற படகை 1.02 கோடி ரூபாய்க்கு வாங்கியது அம்பலமாகியுள்ளது.
இதில் டெல்லியில் வசிக்கக்கூடிய சரஸ்வதி மற்றும் சுந்தரலிங்கம் என்ற தமிழ் தம்பதியின் இரண்டு மகன்களும் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நபரும் சுமார் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை இப்பயணத்திற்கு செலுத்தி இருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், சுமார் 200 பேரின் விவரம் மட்டுமின்றி இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த காலங்களில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கிய படகுப் பயணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கடலில் காணாமல் போகியுள்ளனர்.
2013 முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்கிறது.
அதே சமயம், 2020ஆம் ஆண்டிலிருந்து அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை 1000 த்திலிருந்து 1500 ஆக நியூசிலாந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை தங்கள் நாட்டில் குடியமர்த்தவும் நியூசிலாந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. இதை மனதில் கொண்டு, ஆட்கடத்தல்காரர்கள் நியூசிலாந்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டிருக்கக்கூடும் என எண்ணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: