சனி, 2 பிப்ரவரி, 2019

பிபிசி-யிடம் இந்தியாவை ஏற்கவில்லை கூறிய கருத்துக்காக கௌசல்யா பணியிடை நீக்கம்

BBC : ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை
கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில்,
"அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்," என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்த திட்டங்களை கைவிடவில்லை என்றும், விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் 'இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஹரிஷ் வர்மா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காதல் திருமணம் செய்துகொண்ட கௌசல்யாவின் கணவர் சங்கர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கடந்த 2016ல் கௌசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டார். சங்கர் படுகொலைக்கு பிறகு, கௌசல்யா ஆவணக் கொலைகளுக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவருகிறார்.ure>தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவருகிறார்.

நீதிபதி சந்துரு

கௌசல்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, "அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கான முக்கியமான விதி, எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்பது. அப்படியே பேட்டி அளிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். அதில் பணி தொடர்பாகவோ அரசுக்கு எதிராகவோ பேசக்கூடாது. கட்டுரை, புத்தகம் போன்றவற்றை முன் அனுமதி பெற்றே எழுத வேண்டும். இந்த விவகாரத்தில் இந்த விதி மீறப்பட்டிருக்கிறது," என்று கூறியுள்ளார்.

அ.மார்க்ஸ்

இது குறித்து கருத்துக் கேட்டபோது, பிபிசி தமிழிடம் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து என்பது இருக்கிறது. அதைப் பேசும் உரிமையை மறுக்கக் கூடாது என்றார். மேலும், மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதற்கே உரிமை அளிக்கப்பட்டிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கவிதா கிருஷ்ணன்

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன், கௌசல்யா கூறியது, அவரது பேச்சுரிமை. "அவரை இடை நீக்கம் செய்தது சரியானது அல்ல, அது ஜனநாயகத்துக்குப் புறம்பானது" என்று கூறினார்.
இது குறித்து கௌசல்யாவின் கருத்தை உடனடியாகப் பெற முடியவில்லை

கருத்துகள் இல்லை: