வியாழன், 31 ஜனவரி, 2019

அலையில் அடித்து வரப்பட்ட விசைப்படகால் பாம்பன் பாலத்துக்கு ஆபத்து


மாலைமலர்: பலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அலையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ராமேசுவரம்: ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ராமேசுவரத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாம்பன் பாலம் வழியாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு படகு பாலத்தை கடக்கும்போது, பாலத்தின் தூணில் லேசாக மோதியது. ஆனால் இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.


இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாம்பனை சேர்ந்த ரைஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

திடீரென பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகத்தில் நங்கூரம் அறுந்ததால், அந்த படகு பாலத்தை நோக்கி அடித்து வரப்பட்டது. ஆனால் பாலத்தின் அருகில் உள்ள பாறையில் முட்டி நின்றது. பாலத்துக்கும், அந்த பாறைக்கும் மிகவும் குறைந்த இடைவெளி மட்டுமே உள்ளது. எனவே மீண்டும் பலத்த காற்று வீசினால் அந்த படகு அங்கிருந்து நகர்ந்து பாலத்தில் மோதும் அபாயம் உள்ளது.

எனவே அந்த படகை நேற்று காலை 3 விசைப்படகுகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்து, பாறையில் இருந்து மீட்பதற்காக போராடி வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகம் காரணமாக மதியம் வரை இந்த படகு மீட்கப்படவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த படகு ரெயில் பாலத்தில் மோதும் ஆபத்து உள்ளதால் உடனடியாக கடலோர காவல்படை மூலம் அந்த படகை அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மீனவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: