செவ்வாய், 29 ஜனவரி, 2019

சுமன் குமாரி போதன். .. பாகிஸ்தான்: முதல் இந்து பெண் நீதிபதி நியமனம்!

பாகிஸ்தான்: முதல் இந்து பெண் நீதிபதி நியமனம்!மின்னம்பலம் : பாகிஸ்தான் வரலாற்றிலேயே, இந்து பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்கவுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து,மாகாணத்தில், உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி போதன். ஹைதராபாத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி முடித்தார். பின்னர் கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றார். அதன்பின் தனியார் சட்டசேவை நிறுவனம் ஒன்றில் சுமன் குமாரி போதன் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, தனது சொந்த மாவட்டமான குவம்பர் சஹாதாகோத்திலேயே சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து சுமன் குமாரி போதனின் தந்தையும், கண் மருத்துவருமான பவன் குமார் போதன், ”எனது மகள் எங்கள் சொந்த மாவட்டத்துக்கு இலவசமாக சட்ட உதவிகள் வழங்குவார். சிறுபான்மை மதத்தில் இருந்து நீதிபதியாகப் பணியாற்றுவது சவாலான ஒன்று. ஆனாலும், எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமலும் பணியாற்றுவார் என நம்புகிறேன்” என்று மகிச்சியுடன் தெரிவித்தார். சுதன், பிரபல பாடகர்களான லதா மங்கேஷ்கர் மற்றும் அட்டீஃப் அஸ்லாம் ஆகியோரின் ரசிகை என்றும் குறிப்பிட்டார், சுதனுக்கு இரு சகோதரிகள். ஒருவர் மென்பொருள் பொறியாளராகவும், மற்றொருவர் கணக்கு தணிக்கையாளராகவும் உள்ளனர்.
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்பது முதன்முறை அல்ல. முன்னதாக 2005 முதல் 2007 வரை, ராணா பகவான்தாஸ் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஆனால் இந்து சமூகத்தில் இருந்து பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்பது இதுவே முதன்முறை.
அதுபோன்று, பாகிஸ்தான் மக்கள் கட்சியில், கிருஷ்ண குமாரி கோலி என்ற இந்துப் பெண் சிந்து மாகாணத்தில் இருந்து முதன்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தான் மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினர் மட்டுமே இந்துக்களாக உள்ளனர். இஸ்லாம் மதத்தை அடுத்து பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய மதமாக இந்து மதம் உள்ளது.

கருத்துகள் இல்லை: