சனி, 2 பிப்ரவரி, 2019

ராமதாஸால் ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவிக்கிறோம்!’ - காடுவெட்டி குரு மகன் கண்ணீர்

எம்.திலீபன் விகடன் : ``பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அச்சுறுத்தல்களால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தோடு சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்’’ என்று காடுவெட்டி குருவின் மகன் மீண்டும் அதிர்ச்சியைத் தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குரு, கடந்த மே மாதம் 25-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``எனது மூத்த மகனாக நினைத்த குருவின் குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நானும் எனது கட்சியும் செய்யும்’’ என்று அறிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தில் பிரச்னை பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அவரின் மகன் கடலரசன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய குருவின் மகன் கனலரசன் செய்தியாளர்களிடம் பேசத்தொடங்கினார். ``எனது தந்தை இறந்தது முதல் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அச்சுறுத்தல்களால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தோடு பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். என் அப்பாவை மருத்துவமனையில் கொன்றுவிட்டார்கள். மாவீரன் பிறந்தநாளை வன்னியர் ஜயந்தி விழாவாக எடுக்கக் கூடாது என ராமதாஸ் மற்றும் அன்புமணி தடுக்க முயல்கின்றனர்.

> என் தந்தை குருவின் பெயரை மறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களை நினைவிடத்துக்குச் செல்ல காவல்துறை தடுக்கிறது. அவர்களை அனுமதிக்க வேண்டும். எங்களின் சார்பில் வன்னியர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு வரும் வன்னிய சொந்தங்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என ஆதங்கப்பட்டார். 

கருத்துகள் இல்லை: