வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவில் வைகோ.. கண்ணீர் விட்டார்...கல்லறை வரை உடன் சென்றார்!’

ஜார்ஜ் பெர்னாண்டஸ் இறுதிச் சடங்கில் வைகோஜார்ஜ் பெர்ணாண்டஸ்vikatan.com - x.selvakumar : உக்கிரமமாய் கோபப்படுவார்; உணர்ச்சிவசப்பட்டு அழவும் செய்வார். வைகோவைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்த சேதிதான் இது. அதிலும் தன் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துவண்டு போய் விடுவார். துணிச்சலோடு போராடவும் செய்வார். நட்பைக் கொண்டாடும் வைகோவின் நட்பு வட்டமும் பெரியது. அதில், முக்கியப் புள்ளியாய் இருந்தவர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
தமிழகத்தைத் தாண்டி, தமிழீழத்தையும், விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கும் தலைவர்கள் யாருமே இல்லை. ஆனால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அதிதீவிரமான ஈழ ஆதரவாளராக மாறியதன் பின்னணியில் வைகோவுக்கும்,ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்சுக்குமான நட்புக்கும் முக்கியப் பங்குண்டு. இலங்கையிலிருந்து அமைதிப்படையைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மதுரையில் நடந்த மாநாடு, ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் பாதுகாப்பு மாநாடு அனைத்திலும் பங்கேற்றவர் ஜார்ஜ்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையையும் மீறி, டில்லியில் ஈழத்தமிழர் மாநாட்டை, தனது ஆதரவில் நடத்திக்காட்டியவர். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய ராணுவத்தின் உதவியை இலங்கை கோரியும், அதைத்தர மறுத்தவர். இந்த ஒரு காரணமே, ஜார்ஜ் மீதான வைகோவின் நட்பை மேலும் இறுக்கமாக்கியிருக்கும் என்பதை யாரும் விளக்க வேண்டியதில்லை. அவரது மறைவு, வைகோவுக்கு பெரும் துயர் தந்திருக்குமென்பதிலும் சந்தேகமில்லை. கடந்த சில  ஆண்டுகளாக உடல் நலம் குன்றி, நினைவுகளை இழந்திருந்த நிலையிலும், ஜார்ஜைப் போய்ப் பார்த்து, ஆறுதல் பட்டு வந்தார் வைகோ. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இறந்தபோது, ஸ்டெர்லைட் வழக்கிற்காக டில்லியில் தங்கியிருந்தார் வைகோ.

தகவலறிந்த அடுத்த சில மணி நேரத்தில், பஞ்சசீல் மார்க்கில் உள்ள ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீட்டிற்குச் சென்று, மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். ஜார்ஜின் மனைவி லைலா கபீர் மற்றும் அவரது மகன்களிடம் ஆறுதல் கூறிப் பேசிக் கொண்டிருந்த அவர், ஜார்ஜ் உடனான தனது நினைவுகளில் மூழ்கி, குலுங்கி அழ ஆரம்பித்துள்ளார்.  ஆறுதல் கூறச் சென்ற அவருக்கு,ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்மனைவி லைலா கபீர் ஆறுதல் சொன்ன அதிசயம் அங்கே நிகழ்ந்தது.
மறுநாள், பிருத்வி சாலை கல்லறையில் நடந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டசின் நல்லடக்க நிகழ்விலும் வைகோ பங்கேற்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கர்நாடகத்தில் பிறந்தவரானாலும், தமிழர்கள் மீது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காட்டிய அன்பும், அவர் மீது வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் காட்டிய நட்பும், இரு மாநில மக்களும் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டியதாகும்.

கருத்துகள் இல்லை: