புதன், 30 ஜனவரி, 2019

தமிழ் சினிமா vs ’ப்ளூ சட்டை’ மாறன்?

blue sattai marannakkheeran.in சி.என்.ராமகிருஷ்ணன் : “ஏம்பா.. புதுசா ஒரு படம் வந்திருக்குல்ல.. எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? பார்க்கிற மாதிரி இருக்கா?”
- தொடர்ந்து புது சினிமாக்களைப் பார்க்கும் வழக்கமுள்ள நண்பர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முன்பெல்லாம் தியேட்டருக்குச் செல்வார்கள். காலப்போக்கில், நல்லவிதத்தில் பத்திரிக்கைகளின் விமர்சனம் இருந்தால் மட்டுமே, புது ரிலீஸ் சினிமாக்களைப் பார்த்தார்கள். இப்போதெல்லாம், வெப்சைட் விமர்சனம், தனிநபரின் யூ டியூப் விமர்சனங்கள் ஆர்வமாக கவனிக்கப்படுகின்றன.  ஆனாலும், ‘படம் சொதப்பல். என்னத்தயோ எடுத்திருக்காங்க..’என, விமர்சனத்துக்கு ஆளாகும் சினிமாக்களை, ‘எதற்கு ரிஸ்க்?’ என்று தவிர்க்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும், எந்த விமர்சனத்தையும் பார்க்காமல், படிக்காமல் சினிமாவுக்குச் செல்பவர்களே அனேகம் பேர்.
சரி, விஷயத்துக்கு வருவோம். பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர், தனது தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனலில் கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் காவல்துறையில் புகார் செய்யப்படும் அளவுக்கு சீரியஸாகிவிட்டது.
ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’படம் வெளிவந்த போது, அந்தப் படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக ‘ப்ளூ சட்டை’ மாறனை பல மேடைகளில் கண்டித்துப் பேசினார் அந்தப் படத்தின் இயக்குனர் சாய் ரமணி. அஜித்தின் ‘விவேகம்’ படம் வெளியான போது படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்தார் மாறன். அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக சாடி வந்தனர், நேரிலும் தேடி வந்தனர். இந்த விசயத்தில் மாறனைக் கண்டித்து இயக்குனர் விஜய் மில்டன், ‘ஈட்டி’இயக்குனர் ரவி அரசு உள்ளிட்ட சிலர் வீடியோ வெளியிட்டனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ படத்தை இவர் விமர்சித்த விதம் குறித்து கோபம் கொண்ட கிருத்திகா, மாறனின் ரிவ்யூவை தான் ரிவ்யூ செய்து ஒரு வீடியோவை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனல் வாயிலாகவே வெளியிட்டார். இப்படி அவ்வப்போது நடக்கும் பிரச்சனை இப்போது போலீஸ் வரை சென்றுள்ளது. இந்த எதிர்மறை பிரபலம் மாறனுக்கு சாதகமாகவும் ஆகிறது. இன்றளவிலும் ‘விவேகம் விமர்சனம்’ அவரது சேனல் டாப்லிஸ்ட்டில் தொடர்கிறது.

motta siva ketta siva


சார்லி சாப்ளின் 2 குறித்து, யூ டியூபில் காணப்படும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில் ஒரு பகுதி இது -

“படத்துல கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணி வச்சிருக்கானுங்க. இந்தப் படத்தை எடுத்தவங்க அரையும் குறையுமா அப்டேட் ஆயிருக்காங்க. ரெண்டுங்கெட்டானா அப்டேட் ஆகி உசிர எடுக்கிறாங்க. ஒன்றரை மணி நேரம் வாட்ஸப் மெசேஜை அழிக்கிறத பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா.. இப்ப ஒரு ஆப்ஷன் வந்திருச்சு. டெலிட் ஃபார் எவரி ஒன்ங்கிற ஆப்ஷன்ல, தவறா அனுப்பிய மெசேஜை அழிச்சிட முடியும். அதைவிட்டுட்டு, ஹீரோயின் போன்ல இருக்கிற மெசேஜை அழிக்கிறதையே  ஒன்றரை மணி நேரம் படமா எடுத்து வச்சிருக்காங்க. இந்த மாதிரி விஷயமெல்லாம் வந்தபிறகு, இப்படி ஒரு படம் எடுத்து ஒன்றரை மணி நேரம் வறுத்து எடுத்துட்டாங்க”

”பிரபுதேவா கதையெல்லாம் கேட்கிறாரா? இல்லையான்னு தெரியல. இஷ்டத்துக்கு நடிக்கிறாரு.  இந்தப் படத்துல ஒரு பாட்டு ஹிட் ஆயிருச்சு. அந்தப் பாட்டுக்காக இந்தப் படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்னு ஒரு கோஷ்டி சொல்லிக்கிட்டுத் திரியுது. பொல்லாதவன் படத்துல சந்தானம் சொல்வாப்ல. சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு உசிர விட்றாதன்னு. அதைத்தான் நாங்களும் சொல்லுறோம்.” என்று வார்த்தைகளால் சார்லி சாப்ளின் 2-வை வறுத்தெடுக்கிறார் மாறன்.

இந்தப் படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அளித்திருக்கும் பேட்டியில் -

“சார்லி சாப்ளின் 2-வை பார்த்துட்டு ரிமேக் கேட்டிருக்காங்க. எப்படி ஒரு தனிப்பட்ட ஆளு சினிமாவ கிண்டல் கேலி பண்ணுவான்?  தமிழ்த் திரையுலகமே ப்ளூ சட்டை மாறனுக்கு எதிரா திரும்பியிருக்கு.  ப்ளூ சட்டை மாறனைத் தமிழ் சினிமா விடாது. விமர்சனம் பண்பட்டதா இருக்கணும்; புண்படுத்துவதா இருக்கக்கூடாது. எனக்கு கோடிக்கணக்கான வியூவர்ஸ் இருக்காங்கன்னு ரொம்ப தெனாவட்டாவும் கேவலமாவும் பேசினாரு மாறன். ஒரு படத்தைக் காலி பண்ணனும்னே பேசிக்கிட்டிருக்காரு. பத்துகோடி ரூபாய் செலவழிச்சு எடுத்த படத்த பார்க்கக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு உரிமை கிடையாது. படம் சூப்பர் ஹிட்டா ஓடிக்கிட்டிருக்கு. எல்லா தியேட்டர்லயும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிக்கிட்டிருக்கு. மக்கள் படத்தை தலைமேல தூக்கி வச்சிட்டு கொண்டாடிக்கிட்டிருக்காங்க.” என்கிறார்.

தயாரிப்பாளர் அம்மா க்ரியேஷன்ஸ் டி.சிவா, தன்னுடைய பேட்டியில் -

“அவருடைய சப்ஸ்கிரைபர்ஸை ஏத்துறதுக்காகவும், சம்பாதிக்கிறதுக்காகவும் பண்ணுறாரு. இந்த மாதிரி ஆளுங்களுக்கு விளம்பரம் கொடுப்பதோ, கையூட்டு கொடுப்பதோ கூடாது. காசு கொடுத்தா ஒண்ணு பேசுறது. கொடுக்கலைன்னா ஒண்ணு பேசுறதுன்னு இருக்காரு. காமெடி படத்துல லாஜிக் மீறல் இருக்கத்தான் செய்யும்.” என்று ஆவேசம் காட்டுகிறார்.

charlie chaplin 2
தயாரிப்பாளர் சிவா - ஷக்தி சிதம்பரம் - பிரபுதேவா


கொலை மிரட்டல்?

சார்லி சாப்ளின் 2 தரப்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்திருக்கும் புகாரில் ‘படத்தை யூ டியூபில் விமர்சனம் செய்வதற்கும், அதில் விளம்பரம் செய்வதற்கும் பெரும்தொகை கேட்டார் மாறன். நாங்கள் விளம்பரமோ, பணமோ தரமாட்டோம் என்று மறுத்துவிட்டோம். அதனால், விமர்சனம் என்ற பெயரில், தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.  மேலும், அவர் கொலை மிரட்டலும் விடுத்தார்’ என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூ சட்டை மாறனோ, “நான் யாரையும் மிரட்டவும் இல்லை; பணம் கேட்கவும் இல்லை” என்று மறுக்கிறார். ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் இன்னொரு புறம் அவர் சேனல் மூலம் திரைப்படங்களை விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

பாகவதர் காலத்திலிருந்தே ரசிகர்கள் சந்தித்துவரும் சோதனை!

எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சினிமாக்கள் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களிலும் தோல்விப் படங்கள் உண்டு. அட, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் ‘அட்டர் பிளாப்’ படங்களும் வெளிவந்து ரசிகர்களை இம்சித்திருக்கின்றன. அதே நேரத்தில், தரமான சினிமாக்களும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. குப்பையான மசாலா படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு சினிமாவும் அந்தந்த காலக்கட்டத்தில், அதற்கேற்ற விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. பிற்காலத்தில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜாவின் இசையை, ஆரம்பத்தில்  ‘தகர டப்பாவை உருட்டுகிறார்’ என்று விமர்சித்ததும் நடந்திருக்கிறது. ரசிகர்களைக் கவரும் வகையில் எத்தனையோ பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கும் அவருடைய குரலை, அவர் பாட ஆரம்பித்த காலத்தில் கடுமையாக விமர்சித்த முன்னணி பத்திரிக்கைகளும் உண்டு.

நல்ல இயக்குநர்; நல்ல நடிகர் என்று நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களைச் சோதனைக்கு ஆளாக்கும்போது, குமுறலோ, வசைச்சொற்களோ, விமர்சனமோ வெளிப்படத்தான் செய்யும். ஆனாலும், உள்நோக்கத்துடன் விமர்சகர்கள் யாரேனும் செயல்பட்டால், நிச்சயம் அது கண்டிக்கப்பட வேண்டியதே!

கருத்துகள் இல்லை: