திங்கள், 28 ஜனவரி, 2019

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை
dailythanthi.com :  பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. சென்னை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், அரசு பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.


அதேநேரத்தில், காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு திரும்பிவிட்டனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த அரசு பள்ளியும் இன்று மூடப்படவில்லை.

இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 5 தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்கினர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆசிரியர்களை தவிர 20 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

சென்னை எழிலகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல், திருவள்ளூர், கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்ததால் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் இல்லை என பள்ளி கல்வித்துறை திடீரென முடிவு எடுத்துள்ளது. போராட்ட ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளது.  தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஆசியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு கல்லி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: