ஞாயிறு, 27 ஜனவரி, 2019

திங்கட்கிழமைக்குள் வேலைக்கு திரும்பாவிடில் பணியிடம் காலியாகும்" - ஜாக்டோ ஜியோவுக்கு அரசு இறுதி எச்சரிக்கை!

tamil.indianexpress.com : தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசியர்கள், தங்களின் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
22ம் தேதி தொடங்கிய போராட்டம் 6 வது நாளாக இன்றும் நீடிக்கின்றது. இந்நிலையில் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு தங்களை அழைத்துப் பேசும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்றும், இதற்காக எவ்வித விளைவுகளையும் சந்திக்க தயார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், “எங்களது போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பொய்யான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இது மக்களுக்கான அரசு, அதிகாரிகளுக்கான அரசு இல்லையென ஜெயக்குமார் தெரிவித்தது ஏற்புடையதல்ல. அவரது பேச்சு வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

மாணவர்கள் நலனுக்காக என கூறி தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால், குறைந்த ஊதியம் என்பதால் தற்காலிகப் பணியில் சேர யாரும் முன்வரவில்லை. இதற்கு தீர்வு முதலமைச்சருடனான பேச்சுவார்த்தை மட்டுமே. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
நாளை ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது. நாங்கள் அரசியல் நடத்தினால் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடியாது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையினரின் அடுக்குமுறை அரசுக்கு கேடு விளைவிக்கும். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை நாங்கள் உயர்த்துவோம்.
அமைச்சர்கள், ஜஏஎஸ் அதிகாரிகளின் நிர்வாகச் செலவு, வட்டித் தொகை போன்றவற்றை எங்கள் கணக்கில் காட்டுகின்றனர். மொத்த வரி வருவாயில் எங்களுக்கு 46% மட்டுமே செலவிடப்படுகிறது.
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை எங்களின் நடத்தை விதியோடு சேர்த்தால், நாங்கள் அதை கட்டாயம் பின்பற்றுவோம். அதேபோல, இது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நாளை ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைமை செயலக ஊழியர்கள், நிதித்துறை ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என்றார்.
இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது. ஜன.28க்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும். அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்டு பணியேற்க ஆணை தரப்படும். காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் பணியில் சேர வேண்டும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த எச்சரிக்கை அறிக்கைக்குப் பிறகு பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், “தமிழக அரசின் எந்த எச்சரிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம், போராட்டங்கள் நாளை முதல் வலுப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது. அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” என்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நியமன ஆணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: