செவ்வாய், 29 ஜனவரி, 2019

வங்கியில் துளைபோட்டு 4 கிலோ தங்கம்-பணம் கொள்ளை திருச்சி

வங்கியில் துளைபோட்டு 4 கிலோ தங்கம்-பணம் கொள்ளை திருச்சி அருகே துணிகரம்
பாதுகாப்பு பெட்டகங்களில் திட்டமிட்டு கைவரிசைதினத்தந்தி : திருச்சி அருகே வங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது. பாதுகாப்பு பெட்டகங்களில் திட்டமிட்டு கைவரிசை நடத்திய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி-சமயபுரம் சாலையில் டோல்கேட்டில் தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி இருக்கிறது. கடந்த 25-ந்தேதி மாலையில் வங்கியை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியை திறந்து ஊழியர்கள் உள்ளே வந்தனர். சிறிதுநேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருளை எடுக்க வந்தார். அவருடன், வங்கி ஊழியர் ஒருவரும் பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறையின் கதவை திறந்து உள்ளே சென்றார்.


அப்போது 5 பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அதில் பொருட்கள் ஏதும் இன்றி வெறுமையாக கிடந்தது. மேலும், அறையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்ம நபர்கள் வங்கி சுவரில் துளையிட்டு பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

வங்கியின் பின்புறம் கொள்ளையர்கள் சுவரில் துளையிட்ட இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தனர். அங்கு கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம், கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்டவை கிடந்தன. கியாஸ் வெல்டிங் எந்திரத்தை பயன்படுத்தி வங்கி பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில் ஏதாவது பதிவாகி இருக்கிறதா? என போலீசார் பார்வையிட முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்க்கையும் கழட்டி எடுத்து சென்றது தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள வங்கியில் கொள்ளையர்கள் துணிச்சலாக புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வாடிக்கையாளர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொள்ளை நடந்த பெட்டகங்களில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் இருந்ததை ஏற்கனவே கொள்ளையர்கள் அறிந்து இருந்தார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவு ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்றிருப்பதால் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளை சம்பவம் அரங்கேறியபோது வங்கியில் அலாரம் ஒலிக்கவில்லை. அலாரத்தை செயலிழக்க வைத்தபின்னரே கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் நிகழ்த்தி உள்ளனர். இது வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. வங்கியில் 5 பெட்டகங்களை உடைத்து கொள்ளையடித்து சென்றபோதிலும், மற்ற பெட்டகங்களை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த பல கோடி மதிப்புள்ள பணம்- நகைகள் தப்பின.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கியின் முன்பு திரண்டனர். பெட்டகங்களில் நகை, பணம் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் அதை இழந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறுகையில், “கொள்ளை சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொள்ளை போன நகைகள், பணம் ஆகியவை குறித்து பெட்டகத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியபிறகே சரியான மதிப்பு தெரியவரும்” என்றார்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 2013-ம் ஆண்டு கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: