வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

மதிமுக பேச்சாளர் தனமணி வெங்கட் கழகத்தில் இருந்து நீக்கம் ! வைகோ அதிரடி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை.
சாதி அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பேச்சாளர் தனமணி வெங்கட் தமிழ்நாட்டை நிர்மாணித்ததே தெலுங்கு மன்னர்கள்தான் என்றும் தமிழர்களுக்கு உதவ வந்த தெலுங்கு மக்கள் அழிக்கப்பட்டு, லெமூரியாவில் இருந்து வந்த தமிழர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாவிட்டால் தெலுங்கு இனமே அழிந்துவிடும் என்பது உட்பட சாதியை முன்னிறுத்தி தமிழ்நாடு, தமிழர்கள் குறித்த தவறான பல கருத்துக்களோடு உரையாற்றியிருந்தார். இதுகுறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கேள்விகளும், கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இதுபற்றி தன் கவனத்துக்கு வந்ததும் விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ, தனமணி வெங்கட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனமணி உள்பட மூன்று பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை.
"ஒழுங்கு நடவடிக்கை
தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊடக விவாதக்குழு உறுப்பினரும், கழகப் பேச்சாளருமான கோவை திருமதி தனமணி வெங்கடபதி கழகத்தின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முரண்பட்டு செயல்பட்டதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அவரது கணவர் வெங்கடபதி அவர்களும், கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஸ்ரீமான் சுந்தரம் அவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.'
வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தாயகம்,
சென்னை - 8
01.02.2019

கருத்துகள் இல்லை: