ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

யாழில் சர்வதேச தரமிக்க தனியார் வைத்தியசாலை, கால்கோள் விழா இன்று

நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிற்றல் (பிறைவேற்) லிமிட்டட் எனும் பெயரில் சகல வசதிகளும் அடங்கிய சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். திருநெல்வேலியில் யாழ் - பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள காணியிலேயே மேற்படி கால்கோள் விழா இன்று காலை இடம்பெற்றது. பிரபல தொழிலதிபரான திரு. சாமி அவர்களினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் மேற்படி தனியார் வைத்தியசாலை அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். நல்லை ஆதீனக் குருக்கள் சிறிலசிறி சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளின் ஆசியுரையுடனும் சிவாச்சாரியார் மகாதேவ குருக்களின் பூஜை வழிபாடுகளுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சென்ரல் நேர்சிங் ஹோம் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தெய்வேந்திரம் யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரவிராஜ் அமையவிருக்கும் வைத்தியசாலை ஸ்தாபகர் சாமி பணிப்பாளர் பீ.கணேசராஜா ஆலோசகர் கீர்த்தி எதிரிசிங்க ஹட்டன் நஷனல் வங்கி வடபிராந்திய முகாமையாளர் ஜெகராஜசிங்கம் யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகர் ஒப்பந்தக்காரர் குகசங்கர் ஆகியோர் இணைந்து வேதமந்திரங்கள் ஒலிக்க கிழக்குத் திசைநோக்கி ஒரேநேரத்தில் பக்திபூர்வமாக அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.

இங்கு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எமது பிரதேச அபிவிருத்தியில் முதலீடுகள் பெரும் பங்கினை வகிக்கின்றன. அந்தவகையில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த சாமி அவர்கள் சுகாதாரத் துறையினை இலக்காகக் கொண்டு சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலையினை அமைக்க முன்வந்ததையிட்டு அனைவர் சார்பாகவும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண்டார். அமைச்சரைத் தொடர்ந்து யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அமையவிருக்கும் வைத்தியசாலை  ஆலோசகர் கீர்த்தி எதிரிசிங்க கம்பவரிதி பீ.ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றியமை விசேட அம்சமாகும்.

அமைக்கப்படவிருக்கும் நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிற்றல் (பிறைவேற்) லிமிட்டட் எனும் மேற்படி வைத்தியசாலையானது ஐம்பது படுக்கைகளுடன் கூடியதும் வெளிநோயாளர் பிரிவு உட்பட சகல உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகள் என்பவற்றை உள்ளடக்கி சர்வதேச தரத்தில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: