செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

இலங்கையில் அமெரிக்க ராடர் தமிழகத்திலிருந்து சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளது

ரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமெரிக்க ராடர். இந்தியாவை கண்காணிக்கவாம்.

ரத்மலானை விமானப்படைத்தளத்தில் அமெரிக்கா, தனது செலவில் நவீன ராடர் கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்ராடர் விவகாரத்தில் தமிழகத்திலிருந்து சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய பாதுகாப்பு கேந்திரங்களை குறிவைத்து இலங்கையில் அமெரிக்க ராடர் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த நவீனரக ராடர், செய்மதியூடாக தொலைத் தொடர்புகளையும், தரவுகளின் பரிமாற்றங்களையும், துல்லியமாக அறியும் திறன்கொண்டது எனக் கூறப்படுகிறது. பீச் கிராப் என அழைக்கப்படும், ஆளில்லா வேவு விமானங்களையும் அவதானித்து, இதனூடாக் கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்க தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நவீன ரக ராடர் மூலம் கடல் கண்காணிப்பிலும் ஈடுபடலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து இந்தியா மற்றும் சீனா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் இந்த அதி நவீன ராடர்கள், தமிழ் நாட்டில் உள்ள இந்திய கூட்டுப்படைத்தளத்தை குறிவைத்தே பொருத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஆவடியில் இயங்கும் கனரக ஆயுத உற்பத்தி தொழிற்சாலை, தமிழ் நாட்டில் உள்ள அணுமின் உலை உள்ளிட்ட பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் மேற்படி ராடர் ஊடாக கண்காணிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆசியக் கடற்பரப்பில் தனது ஆளுமையை நிலைநிறுத்த முயலும் சீனாவிற்கும், இது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் அதி நவீன ராடர் கருவிகளை அமெரிக்க வழங்கியுள்ளபோதும், அது எவ்வாறான தகவல்களை மேலதிகமாகச் சேகரித்து, செய்மதியூடாக அனுப்பும் என்பதுபோன்ற மிக நுணுக்கமான விடயங்கள் தொடர்பாக மிகுந்த சந்தேகம் உள்ளது.

ஆகமொத்தத்தில், அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை மீது எவ்வளவு கண் வைத்திருந்தார்கள் என்பது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வருகின்றது.

கருத்துகள் இல்லை: