சனி, 28 டிசம்பர், 2013

எம்.ஆர்.ராதா : கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி. ! ரிவால்வரைக் கொண்டு போனது ! குடிச்சிட்டுப்போனது.!

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:–
எம்.ஆர்.ராதா:– இதோபார், நீ என் புள்ளை மாதிரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஒரு உண்மையை உங்கிட்டேதான் சொல்றேன். நான் பெரியார் வழியைப் பின்பற்றுறவன். இந்த சத்தியம் அது இதுன்னு எல்லாம் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லே. உண்மைன்னா உண்மை. அவ்வளவுதான்.
நான் சுடணுங்குற எண்ணத்துல துப்பாக்கியோட தோட்டத்துக்குப்போகலே. சுடணும்னு முடிவு பண்ணியிருந்தா ஸ்டூடியோவுலேயே வச்சி சுட்டிருப்பேன் இல்லியா?
சுட்டுடுவேன்னு சொல்லி ரிவால்வரைக்காட்டி சும்மா மிரட்டுறதுக்காகத்தான் கொண்டு போனேன். அதுவும் ஏன்? இரண்டு மாசத்துக்குள்ளே முடிச்சு ரிலீஸ் பண்ணணும்னு திட்டம் போட்டு தொடங்கின ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’ படம் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் லேட்டாகி வருஷக்கடைசிக்கு வந்திடுச்சி.
அதனால் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகலே. வட்டி இல்லாம வெறும் கைமாத்தா வாசுவுக்கு நான் கொடுத்த லட்ச ரூபாய் பணத்தை சொன்னபடி எனக்குத் திருப்பிக் கொடுக்க அவனால் முடியவில்லை.
எம்.ஜி.ஆரை வச்சு படம் தொடங்கினா போதும். எல்லா ஏரியாவும் வித்து பணம் கைக்கு வந்திடும். அதுல எனக்குக் கொடுக்கவேண்டிய லட்ச ரூபாயைக் கொடுத்திட்டு பாக்கிய வச்சுப் படத்தை முடிச்சிடலான்னு வாசு சொன்னதை நான் நம்பிட்டேன். அவன் தப்புக்கணக்கு போட்டான். அது நடக்கலே. கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி.

தேவை இல்லாமல் நான் வீணா மாட்டிக்கிட்டேன். அப்படி இப்படின்னு படத்தை ஒரு வழியா முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு அடுத்தபடியா பைனான்சுக்கு கோயம்புத்தூர்ல ஒரு பார்ட்டியைப் பார்த்து பேசி முடிச்சிட்டு, கால்ஷீட் கேட்குறதுக்காகத்தான் தோட்டத்துக்குப்போனோம்.
சும்மா சொல்லக்கூடாது. நான் இடுப்புல துப்பாக்கியை சொருகி மறைச்சு வச்சிருந்தது பாவம் வாசுவுக்குத் தெரியாது. போறதுக்கு முன்னால நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அது என்னன்னா, அன்னிக்கு மத்தியானம் வாசு வீட்டுல நான் சாப்பிடும்போது ஒரு கால் பாட்டிலும், அப்புறம் சாயந்திரம் போறதுக்கு முன்னால குடிச்சிட்டு பாக்கி வச்சிருந்த அந்தக் கால் பாட்டில் சரக்கையும் ஏத்திக்கிட்டேன்.
கோயம்புத்தூர் பைனான்ஸ் பார்ட்டியைக் கொண்டாந்து தனக்கு காட்டும்படியா ராமச்சந்திரன் சொன்னதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்திடுச்சு. என் இடுப்புலேருந்து ரிவால்வரை உருவி சும்மா மிரட்டுறதுக்காக பொட்டுல வைக்கிறதா நினைச்சு காதுக்குள்ளே வச்சிட்டேன்.
நல்ல போதை மப்பு வேறயா? என்ன செய்றோம்னு எனக்கே தெரியலே. ரிவால்வர் குதிரையை (விசையை) தவறுதலாக அழுத்திட்டேன். இப்பவும் சொல்றேன், நான் செஞ்சது குற்றம் இல்லே. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் பொழைச்சிக்கிட்டோம்.
ஆனால் என்னோட தப்பு, அதுவும் இரண்டு தப்பு. ஒண்ணு ரிவால்வரைக் கொண்டு போனது. இரண்டாவது குடிச்சிட்டுப்போனது. இந்த இரண்டு தப்பையும் நான் செய்யாமல் இருந்திருந்தால் நீ சொன்ன மாதிரி, என் வாழ்நாள்ள அனாவசியமா அஞ்சு வருஷம் அநியாயத்துக்கு வீணா போயிருக்காது. இந்த அஞ்சு வருஷத்துல அம்பது படம் நடிச்சி லட்சம் லட்சமாக சம்பாதிச்சிருப்பேன். போச்சு. எல்லாமே போச்சு’.
சில விநாடி நேரம் மவுனம். அவர் முகம் கவலை தோய்ந்து காணப்பட்டது. தான் செய்த தவறைப்பற்றிய அந்த உண்மையான உணர்வு, தளர்ந்துபோன அவர் முகத்தில் பரவிப்படர்ந்தது. கண்கள் கலங்கின.வசனகர்த்தா ஆருர்தாஸ் , dailythanthi.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். Who said this? Whose statement is this? I wonder!!