வெள்ளி, 27 டிசம்பர், 2013

கார்விற்பனை கடும் சரிவு ! இரு சக்கர வாகனங்கள் துறையில் பாதிப்பில்லை


மும்பை
விற்பனை சரிவடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோட்டார் வாகன துறையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக இத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கார் நிறுவனங்கள்
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், குறிப்பாக கார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உற்பத்தி குறைப்பு, கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க முயற்சி போன்றவை இதில் அடங்கும். ஊரக பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2012–ஆம் ஆண்டைக் காட்டிலும் விற்பனை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் கிராமங்களின் பங்கு ஏறக்குறைய 33 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் கிராமங்களில் களம் இறங்குவது தற்போது இந்நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. கார்விற்பனை கடும் சரிவு 

வோல்ஸ்வேகன்
உள்நாட்டில் விற்பனை குறைந்ததால் வோல்ஸ்வேகன் நிறுவனம் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் மலேசியா, மெக்சிகோ, தைவான் போன்ற புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி மேற்கொண்டதால் உள்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு சமாளித்திருக்கிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டுத் திட்டங்களை மறு ஆய்வு செய்து வருகிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தற்போது ஒரு மாதத்தில் எட்டு தினங்கள் மட்டுமே கார் உற்பத்தியை மேற்கொள்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஒரே ஒரு ஷிப்ட் மட்டும்தான் செயல்படுகிறது. இதே போன்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏற்படும் தேவையைப் பொறுத்து உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
‘‘என்னுடைய பணிக்காலத்தில் நான் இது போன்ற ஒரு சோதனையான காலத்தை இதுவரை சந்தித்ததேயில்லை. இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் சில துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது’’ என ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
மகிந்திரா, டாட்டா
மகிந்திரா அண்டு மகிந்திராவும், டாட்டா மோட்டார்ஸும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த விற்பனையில் டீசல் வாகனங்களின் பங்கு 95 சதவீதமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் புதிய வகை பெட்ரோல் இன்ஜின்களை உருவாக்குவதில் இப்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
டீசல் விற்பனையில் வருவாய் இழப்பு ஏற்படாத நிலை வரும் வரை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின் டீசல் விலை 11 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2013 ஜனவரியிலிருந்து இதுவரை ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.6.62 அதிகரித்துள்ளது.
கலால் வரி அதிகரிப்பு
மேலும் பயன்பாட்டு வாகனங்கள் மீதான கலால் வரி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இப்பிரிவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் இந்த வாகனங்கள் விற்பனை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்ததால் உற்பத்தி செலவினம் அதிகமாகி இவ்வகை வாகனங்களின் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.
சலுகையால் பலனில்லை
இந்நிலையில், கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்றவை வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன. இதுவும் விற்பனையை பாதித்தது. சில நிறுவனங்கள் பெரும் தள்ளுபடி சலுகைகள் வழங்கியும் பலனில்லாமல் போயிற்று. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது. மகிந்திராவின் விற்பனை 13 சதவீதமும், நிசான் நிறுவனத்தின் விற்பனை 43 சதவீதமும் குறைந்துள்ளது. டொயோட்டா கார் விற்பனை 23 சதவீதமும், ஸ்கோடா கார்கள் விற்பனை 42 சதவீதமும் சரிந்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் துறையில் பாதிப்பில்லை
பொருளாதார மந்தநிலையால் கார் மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனை பாதிக்கப்படவில்லை. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை இரு சக்கர வாகனங்கள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008–09 மற்றும் 2012–13 நிதி ஆண்டுகளுக்கு இடையில் இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் வாகன உற்பத்தித் திறன் 19.30 லட்சத்திலிருந்து 49 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பெருவாரி மக்களின் வரவேற்பை பெற்ற மாடல்களின் எண்ணிக்கை 12–லிருந்து 21–ஆக அதிகரித்துள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை: