ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பிரியாணி - ஏகப்பட்ட டபுள் மீனிங் வசனங்கள்

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என வெளிநாட்டு ரெசிபிக்களை எக்கச்சக்கமாக திருடி வண்ணமயமான ஆம்பூர் பிரியாணியைக் கிண்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. வழக்கமான வெங்கட் பிரபு ஸ்டைலில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் குடியும் கூத்துமாய் அமைந்திருக்கிறது.
பார்க்கிற பெண்களையெல்லாம் மடக்கிவிடும் மன்மதனாக வலம் வருகிறார் கார்த்தி. ஆனாலும் ஆட்டம் டூ மச்சாகத்தான் இருந்தது. அதைவிட முக்கியமான விஷயம், பிரேம்ஜி வரும் காட்சிகள் கடுப்பைக் கிளப்பாமல் கலகலப்பாக சிரிக்க வைப்பது மிகப்பெரும் ஆறுதல்.

இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் நாசர். நாசருக்கு மக்கள் மத்தியில் வள்ளல் என்ற பெயர் இருந்தாலும் அவர் வெளியே தெரியாமல் பல கடத்தல் பிசினஸ் செய்துவருகிறார். அதனால் அவரை கைது செய்ய போலீஸ் வலைவிரிக்கிறது. அவர் நடத்தும் கம்பெனியில் வேலைப்பார்ப்பவர்கள் தான் கார்த்தியும் பிரேம்ஜியும். கம்பெனி வேலை அவர்களுக்கு பார்ட்-டைம் ஜாப் தான். அவர்களின் முழு நேர வேலை பார்டியில் குடித்துவிட்டு கூத்தடிப்பதுதான். பிரேம்ஜி கரெக்ட் பண்ண நினைக்கும் ஃபிகர்களிடமெல்லாம் கார்த்தி கச்சிதமாய் தன் லீலைகளை நடத்திவிடுகிறார். அப்படி ஹன்சிகாவை லவ் பண்ண கார்த்தியிடம் பிரேம்ஜி ஐடியா கேட்க ஹன்சிகாவும் கார்த்தி வலையில் விழுந்துவிடுகிறார். 

கார்த்தி ஒரு கெட்ட பையன்னு எப்படி எப்படியோ நிரூபிக்க நினைக்கிறார் பிரேம்ஜி. ஆனால் எல்லா விஷயத்திலும் கார்த்தியை நல்லவனாகவே நம்புகிறது உலகம். தான் செய்யும் எல்லா தப்புத்தண்டாக்களையும் பிரேம்ஜி மேல் சுமத்தி தப்பித்துவிடுகிறார் கார்த்தி. பிரியாணிக்கு பேமஸான ஆம்பூரில் தன் புதிய கம்பெனியை துவங்குகிறார் நாசர். அதன் தொடக்க விழா வேலைகளை செய்ய கார்த்தியும் பிரேம்ஜியும் போக... அங்கேயும் கலர்’ஸ்சுடன் கார்த்தி கடையை விரிப்பதும் அதைப் பார்த்து பிரேம்ஜி வயிறு எரிவதும் என கலகலப்பாக காட்சிகள் நகர்கிறது.


வழக்கம் போலவே சரக்கடிக்கும் நட்புகள் இருவரும் பிரியாணி கடையை தேடி அலைகிறார்கள். பிரியாணி சப்பிடும் நேரம் தட்டில் இருக்கும் பீஸைவிட செம பீஸ் ஒன்று காரில் வந்து இறங்குகிறது. வழக்கம் போலவே கார்த்தி தன் லீலைகளை அவிழ்த்துவிட, ஃபிகரும் வலையில் விழுகிறது. அந்த பீஸுக்கு ஆசைப்பட்ட இவர்களின் வாழ்க்கை எப்படி பீஸ் பீஸாகிப் போனது என்பது தான் மீதி கதை. 

போலிஸ் கைது செய்ய வரும் நேரம் நாசர் காணவில்லை என தகவல் கிடைக்க, நாசரை கார்த்தி தான் கடத்தி வைத்திருக்கிறார் என பழி விழ, போலீசிடமிருந்து தப்பி ஓடும் கார்த்தியும் பிரேம்ஜியும் தலைமறைவாக இருக்க, கார்த்தியின் காரிலேயே நாசர் பிணமாய் கிடக்க என குழப்பம் நீண்டு கொண்டே போகிறது. நாசரை காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு வர நினைத்த அவரின் மருமகன் ராம்கி தான் இந்த சதியை செய்திருக்க வேண்டும் என கார்த்தியோடு சேர்ந்து நாம் எதிர்பார்க்க... கொஞ்சம் பழைய ஸ்டைல் தான் என்றாலும் அதையே புதுமாதிரியாக திரைக்கதை அமைத்து க்ளைமாக்ஸை கொண்டுவருகிறார் இயக்குனர். 


முதல் பாதி கதையே இல்லாமல் நகர்வதால் அங்கங்கே சலிப்பு வந்துபோகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை ஹை-வேயில் பறக்க பல காட்சிகளில் மிரட்டுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. கமர்ஷியல் படம், அதனால லாஜிக் பார்க்க கூடாதுன்னு சொன்னாலும், ஒன்னு ரெண்டு இடம்ன்னா பரவாயில்ல, ஏகப்பட்ட இடத்தில் கழுதை கணக்கா ஒதைக்குதே! 

ஒரே ஆள் அத்தனை போலீசையும் அடித்து போடுவது, புலிவேஷம் போட்டு டி.வி.சேனலுக்குள் நுழைவது, அதையெல்லாம் மீறி பாலத்திலிருந்து பறக்கும் கார் மெதுவாக வந்து தரையில் லேண்டாகுதே... யப்பா! 

படத்தில் ஏகப்பட்ட டபுள் மீனிங் வசனங்கள். பொண்ணுங்கள எப்படி கரெக்ட் பண்றதுன்னு ரொம்ப நல்லாவே கத்துகொடுக்கிறார் இயக்குனர். கார்த்தியும் சும்மா பூந்து விளையாடுறார்ன்னா பாத்துங்கோங்க. காருக்குள்ள உட்காந்து கார் ஓட்டிகிட்டே, கார் ஓடுவதைப் பற்றி பேசிக்கிறாங்களே, அந்தக் காட்சியில் இளசுகளின் ஆரவாரம் அமோகம். அவன் கார் வாங்குனாலும் நான் தான் ஓட்டுவேன், ஏன்னா அவனுக்கு கார் ஓட்டத்தெரியாதுன்னு பிரேம்ஜியை கலாய்க்கும் காட்சி கலகலப்பு. எப்போதுமே எமோஷனல் காட்சியில் அசத்துவார் கார்த்தி. தன் அக்காவை வில்லன்கள் கடத்தி செல்லும் காட்சியில் கார்த்தியின் நடிப்பு நெகிழ வைக்கிறது. நாசர் பிரேம்ஜி போல நடிப்பதும், அவருக்கு பிரேம்ஜி வாய்ஸ் கொடுப்பதும் ஆங்கில படத்தின் அட்ட காப்பிதான் என்றாலும் கூட ரசிக்க வைக்கிறது. நாசருக்கு நடிப்பு சொல்லியாத் தரனும்!


மிசிசிப்பி பாடலில் கார்த்தியும் பிரேம்ஜியும் அடிக்கிற லூட்டி செம. ‘நான்தான் உனை மெச்சும்படி நடக்கட்டும் குச்சுப்புடி... கோலைக்கொடி தோலைப்புடி சொர்கத்தின் மச்சிப்படி’ என்று வாலியின் வரிகள் இன்றும் இளமையாய் இருப்பது வியக்க வைக்கிறது. யுவன் இசையால் சில புதுமைகள் செய்திருக்கிறார் என்று தெரிகிறது, ஆனால் அது என்ன புதுமைன்னு தான் தெரியல. எப்படியோ... எல்லாப் பாடல்களும் தாளம் போட வைக்கிறது.

இயக்குனரே... இந்த சரக்கு உலகத்த விட்டு கொஞ்சம் வெளிய வந்தால் தான் என்ன... படத்தில் வரும் சரக்கு காட்சிகளை கணக்கெடுத்தால், காட்சிப்படுத்திய கேமராவுக்கே போதை ஏறி இருக்கும்! கதையே கொஞ்சம் தான், ஆனா சரக்கு தான் அதிகம். 

கொஞ்ச நேரம் வந்தாலும் லெக் பீஸாக வந்து அரங்கத்தை சூடாக்குகிறார் பஞ்சாப் நடிகை மேண்டி. ஹன்சிகாவுக்கு அதிக வேலையில்லை, அவ்வப்போது வந்து ஆனியனாக ருசி சேர்க்கிறார். அடுத்தடுத்து சருக்கிக் கொண்டிருக்கும் கார்த்திக்கு பிரியாணி கைகொடுத்து காப்பாற்றியிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் பாத்து கால் வைங்க பாஸ்! 

பிரியாணி - பசிக்கு கிடைத்த ருசி! ஒரு கட்டு கட்டலாம்!

கருத்துகள் இல்லை: