ஞாயிறு, 22 டிசம்பர், 2013

கையும் களவுமாக பிடிபட்ட போலீசும் பிடிபட்ட அதிமுக பிரமுகரும்

லஞ்சப் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார்ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில் தாம்சன், நேற்று மாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ரமேஷ் என்பவர் மீது விஜயா என்ற பெண் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய ரமேஷ், அந்தப் பணத்தை தராமல் இழுத்தடிப்பதாக கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் தாம்சன், விஜயாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அ.தி.மு.க. பிரமுகர் ரமேசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். நேற்று மதியம், பாடிக்குப்பம் ரோட்டில் வைத்து ரமேஷ் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்ரியா, டி.எஸ்.பி. முருகேசன், மற்றும் போலீசார் இன்ஸ்பெக்டர் தாம்சனை சுற்றி வளைத்தனர். போலீசை கண்டதும் தப்பமுயன்ற அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் தாம்சனை, ஜனவரி 3–ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நள்ளிரவு 11 மணி அளவில் தாம்சன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தனது பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தார். கடந்த ஜூலை மாதம் லண்டனில் படித்து வந்த இவரது மகள் ஜார்ஜினா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் லண்டனுக்கு விரைந்து சென்ற தாம்சன், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார்.
அப்போது உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் அவர் மீது மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் தாம்சன், லஞ்சப் புகாரில் சிக்கி சிறை சென்றிருப்பது அவர் மீதான மரியாதையை குறைத்துள்ளது.
நேற்றில் இருந்து 10 நாட்களுக்கு அவர் விடுமுறை எடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அவர் ஜெருசலேம் செல்லவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கிக் கொண்டார்.
1987–ல் பணியில் சேர்ந்த இவர் செங்கல்பட்டில் பணியாற்றிய போதும் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிடிபட்டுள்ளார். பின்னர் ஐகோர்ட்டில் உத்தரவு பெற்று பணிக்கு திரும்பியுள்ளார்.
இதுபோன்று லஞ்சப் புகாரில் சிக்குபவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இன்ஸ்பெக்டர் தாம்சனும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கி கைதான இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது வீட்டு வாடகை தர மறுப்பதாக புதிய புகார் எழுந்துள்ளது.
அண்ணாநகர் 47–வது வட்ட அ.தி.மு.க. பொருளாளராக இருப்பவர் அனந்தகுமார். இவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தாம்சன் மீது புகார் கொடுக்க வந்தார். விடுமுறை நாள் என்பதால் அவரால் நேரடியாக மனுகொடுக்க முடியவில்லை. ஆனால் தனது புகார் மனு நகல்களை நிருபர்களிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கடந்த 10.11.2006 அன்று தாம்சன் தன்னை ஒரு வியாபாரி என்று அறிமுகப்படுத்தி என்னிடம் வீடு வாடகைக்கு கேட்டார். அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகர் பாடிக்குப்பம் சாலையில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டை அவருக்கு வாடகைக்கு விட்டேன்.
முன்பணமாக ரூ.50 ஆயிரம் பேசி ரூ.5 ஆயிரம் வாடகை தருவதாக அவரது முதல் மனைவி ஜாய்ஸ் பெயரில் ஒப்பதம் போடப்பட்டுள்ளது.
2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முறையாக வாடகை கொடுதார். 2 வருடம் முடிந்ததும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க சென்ற போதுதான் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது.
பின்னர் வாடகை கொடுக்க மறுத்த அவர் மிரட்டும் தொனியில் பேசினார். இனி வாடகை கேட்டு வீட்டுக்கு வந்தால் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார்.
கடந்த 2009–ஜூன் மாதம் இன்ஸ்பெக்டர் தாம்சனை சந்தித்து எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்தேன். அப்போது இந்த வீட்டுக்கு எனது மகள் குடிவர போகிறாள். எனவே வீட்டை காலி செய்து தாருங்கள் என்றேன்.
இதனால் ஆவேசம் அடைந்த தாம்சன் இன்னொரு முறை வீட்டை காலி செய்ய சொன்னால் நடப்பது வேறு என்று மிரட்டினார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கும் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பி உள்ளேன்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாம்சனின் முதல் மனைவி ஜாய்ஸ் இறந்துவிட்டார். அதன் பிறகு 6 மாதத்தில் வீட்டை காலி செய்து தருவதாக கூறிய அவர் 2–வது மனைவியை அந்த வீட்டில் குடிவைத்துவிட்டார். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது புகாரை விசாரித்த அதிகாரிகளும் தாமச்சனை எதுவும் செய்ய முடியாது. அவர் அரசியல் பின்னணி உடையவர் என்று கூறி விட்டனர். இதனால் நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை வாபஸ் பெற கோரி தாம்சன் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டதாக அறிந்தேன். எனவே எனக்கு சொந்தமான வீட்டை மீட்டுத்தர கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: