சனி, 28 டிசம்பர், 2013

மோடி விசாரணைக்கு பதிலடி? ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை ! பா.ஜ.க. அரசு அறிவிப்பு


ஜெய்ப்பூர்,
மோடி மீது இளம்பெண் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க முடிவெடுத்த மறுநாளே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா அரசு அறிவித்துள்ளது.
விசாரணை கமிஷன்
குஜராத் மாநிலத்தில் கட்டிடக்கலை வல்லுநரான ஒரு இளம்பெண்ணை உளவு பார்க்க உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனை மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

பாரதீய ஜனதா பதிலடி
இந்த அறிவிப்பு வெளியான மறுநாளான நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது விசாரணை கமிஷன் அமைப்பதாக ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா அரசு அறிவித்துள்ளது. இது காங்கிரசுக்கு பாரதீய ஜனதாவின் பதிலடியாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சலுகை விலையில் நிலங்களை விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றதாகவும், இதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயம் அடைந்ததாகவும் ராபர்ட் வதேரா மீது புகார்கள் எழுந்துள்ளன.
ராஜஸ்தான் முறைகேடுகள்
அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடப்பதாலும், டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடனே ஆம் ஆத்மி கட்சி அரசு அமைக்க இருப்பதாலும் அந்த மாநிலங்களில் ராபர்ட் வதேரா மீதான புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படுவது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசை வீழ்த்தி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
ரவிசங்கர் பிரசாத் உள்பட 5 பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்–மந்திரி வசுந்தராவிடம் மனு கொடுத்தனர். குறிப்பாக ராபர்ட் வதேரா ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
வதேரா மீது விசாரணை கமிஷன்
இதுபற்றி ராஜஸ்தான் மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வந்தது. சட்டத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா அரசு ராபர்ட் வதேரா மீது நிலம் மோசடி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த விசாரணை கமிஷனும் 2 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இந்த இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: