வியாழன், 26 டிசம்பர், 2013

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறதுதமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கி.பி 6-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் "தாமு" தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.


சீனாவின் ஹெனன் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் "குங்பூ" என்ற தற்காப்பு கலையை அவர் பயிற்றுவித்து வந்ததாகவும் ஜங் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மண்ணிலிருந்து சென்ற இத்துறவி தனது போதனைகளின் மூலம் சீன, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார்.

இந்நிலையில் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு சில தினங்களுக்கு முன் காஞ்சி நகருக்கு வந்தது. அப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்.

2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார். இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக லின் தெரிவித்துள்ளார். ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: