திங்கள், 23 டிசம்பர், 2013

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் முதல்–மந்திரி ஆகிறார் இன்று கவர்னரை சந்திக்க முடிவு

டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். புதுடெல்லி,
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரில் முன்னணி பங்கு வகித்தார்.
பெரும்பான்மை இல்லை
அவருடைய தலைமையில் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. முதல் தேர்தலிலேயே, அந்த கட்சி பெற்ற அதிரடி வெற்றி, நாட்டு மக்களை திரும்பிப்பார்க்க வைத்தது. என்றாலும், மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 31 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜனதா கட்சி முதல் இடத்தைப் பிடித்தது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 2–வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி, 8 இடங்களுடன் 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெரும்பான்மை பலம் இல்லாததால் பா.ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.

மக்கள் கருத்து
இதனால், 2–வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. புதிய அரசியல் திருப்பமாக, காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. அதைத் தொடர்ந்து பொது மக்களின் கருத்தை அறிந்து ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா? என்று கருத்து கேட்டு, டெல்லி மக்களுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இ மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மக்கள் கருத்து கேட்டு அறியப்பட்டது. ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆட்சி அமைப்பது குறித்து தங்கள் பதிலை தெரிவித்து இருந்தனர்.
ஆட்சி அமைக்க முடிவு
அவர்களில் பெரும்பான்மையோர் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள 272 வார்டுகளிலும் மக்களை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது. மக்கள் தெரிவித்த பெரும்பான்மை கருத்து அடிப்படையில், டெல்லியில் ஆட்சி அமைக்கும் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் இந்த தகவலை சூசகமாக வெளியிட்டார். ‘‘டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் அதிகாரபூர்வ முடிவு இரவு அல்லது நாளை (அதாவது இன்று) காலைக்குள் அறிவிக்கப்படும்’’ என்று அவர் கூறினார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது–
உண்மையான ஜனநாயகம்
‘‘டெல்லி முழுவதும் மக்களை சந்தித்து கருத்து கேட்டு வருகிறோம். எனது தொகுதியில் மட்டும் 4 இடங்களில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. இதுபோன்ற ஒரு கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும். பொதுவாக சாதாரண மக்களின் கடமை ஓட்டளிப்பதுடன் முடிந்துவிடும். ஆனால், நாங்கள் மக்களை சந்தித்து, அவர்களிடம் உள்ள அதிகாரத்தை உணரச் செய்து இருக்கிறோம். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்களுடைய கருத்தை முழுமையாக அறிந்த பிறகு, திங்கட் கிழமை காலைக்குள் ஆட்சி அமைக்கும் முடிவை அறிவிப்போம்.
ஆட்சி அமைக்க முடியும்
தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்பதில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் தயங்குவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. எங்களால் சிறப்பான ஆட்சி அமைக்க முடியும்.  தேர்தல் அறிக்கையில் சொன்னது அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். பல்வேறு துறைகளின் வல்லுனர்களுடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப்பிறகுதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆம் ஆத்மியிடம் இருந்து டெல்லி மக்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்’’.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
கெஜ்ரிவால் முதல்–மந்திரி
ஆம் ஆத்மி கட்சியின் சட்ட மன்ற கட்சித்தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். எனவே ஆட்சி அமைக்கும் முடிவு அதிகாரபூர்வமாக எடுக்கப்பட்டால், கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்பது உறுதி. இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்தில், ஆட்சி அமைக்கும் முடிவை கெஜ்ரிவால் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பகல் 12.30 மணி அளவில் டெல்லி  கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முக்கியத்துவம்
முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, தற்போது இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையிலும் டெல்லியில் ஆட்சி அமைக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது. அதே போல் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சியும், ‘மாற்று வழி’களில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.
ராம்லீலா மைதானத்தில்
தேர்தல் பிரசாரத்தின்போது, தங்கள் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தால், டிசம்பர் 29–ந்தேதி அன்று ராம்லீலா மைதானத்தில் மக்கள் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம் என்றும், ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ஆட்சி அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு இருப்பதால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் முடிவை எடுத்தால் மக்கள் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற மேலும் ஒரு வார காலம் தாமதம் ஆகலாம் என்றும், ஆனால் நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம் என்றும் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் ஆதரவு உறுதி
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது உறுதி என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முன்னாள் மந்திரி கிரண்வாலியா, டெல்லி மக்களின் நன்மையைக் கருதி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், அந்த கட்சியின் கொள்கை அறிக்கையை ஆதரிப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: