சனி, 28 டிசம்பர், 2013

குஜராத் கலவரம்: வேதனையை விவரிக்க வார்த்தை இல்லை- மோடி ! கொலையும் செய்துவிட்டு அதற்காக கண்ணீரும் விட்டு

குஜராத் கலவரத்தின்போது தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை குஜராத் கலவரம் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளை மோடி பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அந்த கலவரம் தொடர்பாக அவர் வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை என்று கூறப்படும் நிலையில் முதல்முறையாக அவர் மனம் திறந்துள்ளார்.
வலைப்பதிவில்..
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தனது இணையதள வலைப்பதிவில் அவர் மிக உருக்கமாக எழுதியிருப்பதாவது:
நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு மன நிம்மதியை அளித்துள்ளது. இந்த நேரத்தில் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். முதல்முறையாக எனது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். 

2001-ல் குஜராத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக் கானோர் வீடுகளை இழந்தனர். அந்த வேதனையான சம்பவங்களை கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. அப்போது குஜராத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு என் தோளின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதை நானும் குஜராத் மக்களும் சவாலாக ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 5 மாதங்களுக்குள் எதிர்பாராத பேரிடியாக 2002-ம் ஆண்டில் கலவரம் வெடித்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குடும்பங்கள் நிர்க்கதியாக தெருவில் நின்றன. சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அப்போது என்னுடைய இதயம் உலுக்கப்பட்டது. எனக்கு ஏற்பட்ட மனவலியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. மனிதாபிமானமற்ற அந்த சம்பவத்தை “துயரம், சோகம், துன்பம், வலி, வேதனை, கடும் துயரம், மரண வேதனை” என எந்த வார்த்தைகளால் குறிப்பிட்டாலும் மனத்துயரம் ஆறாது.
ஒருபக்கம் பூகம்ப வடுக்கள், மறுபக்கம் கலவரத்தின் வலி, வேதனை. இந்த பெரும் குழப்பத்தில் கடவுள் எனக்கு தந்த மனோதிடத்தால் சிந்தனையை ஒருமுகப்படுத்தினேன். தனிப் பட்ட வேதனை, வலிகளை தூக்கியெறிந்துவிட்டு அமைதி, நீதி, மறுபுனரமைப்பு பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். அந்த சவாலான நேரங்களில் நமது இதிகாசம், இலக்கியங்களில் இருந்து அறிவுரை, ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டேன்.
பிரார்த்திப்பேன்
பதவியில் இருப்பவர்கள் தங்களின் துன்பம், துயரத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் தனிப்பட்ட முறையில்தான் அதனை எதிர்கொண்டாக வேண்டும். அந்த நிலைதான் எனக்கும் ஏற்பட்டது.
அந்த துயரமான காலத்தை இப்போது நினைவுகூர்ந்தால்கூட கடவுளை நோக்கி பிரார்த்திக்கத் தொடங்கிவிடுவேன். குஜராத் கலவரம் போன்ற துயரம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. எந்த சமுதாயமானாலும் எந்த மாநிலமானாலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற கலவரம் இனிமேல் நேரிடவே கூடாது.
பழைய சம்பவங்களில் கற்ற பாடத்தின் மூலம் குஜராத் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நாங்கள் வன் முறையைக் கைவிட்டு அமைதியைத் தேர்வு செய்தோம். பிரிவினையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒற்றுமையைக் கடைப்பிடித்தோம். வெறுப்புணர்வை விரட்டிவிட்டு நல்லெண்ணத்தை வரவேற்றோம்.
பலரின் மரணத்துக்கு காரணமான குற்றவாளி என்று பலராலும் பலமுறை நான் விமர்சிக்கப்பட்டேன். இப்போது வெளியாகியுள்ள நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு மனநிம்மதியை அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு எனக்கு கிடைத்த வெற்றி என்றோ தோல்வி என்றா நான் கருதவில்லை. நான் சமநிலையானவன். 2011-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோதும் இதே சமநிலையைத்தான் கடைப்பிடித்தேன். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: